கோலாலம்பூர்: ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கலாச்சாரத்தை நிறுவுவதற்கான கல்வி அம்சம் உட்பட நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக புதியதாக பதவி ஏற்றுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் வழக்கறிஞர் லத்தீஃபா கோயா கூறியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை தமது பணியைத் தொடங்கிய அவர், ஒவ்வொரு மலேசியரும் ஊழலில்லாத வாழ்வு, வேலை சூழ்நிலையில் செழிப்புடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் எந்தவொரு கருத்துக்கும் வினாவுக்கும், விமர்சிக்கவோ அல்லது அவர்களது எண்ணத்தை வெளிப்படுத்தவோ உரிமை உள்ளது. அதனை நான் ஏற்கிறேன். தற்போதைக்கு, எனது வேலை எல்லா இடங்களிலும் ஊழலை எதிர்த்து போராடுவது என்பது தெளிவாக உள்ளது” என்று அவர் கூறினார்.
எம்ஏசிசியில் உள்ள அதிகாரிகள் மற்றும் மக்களின் ஆதரவில் ஊழலற்ற மலேசியாவை உருவாக்குவதில் தாம் சிறப்பாக செயலாற்ற முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.