Home நாடு “நுண்ணறிவிலும் தொழில்திறனிலும் இளைஞர்கள் நாட்டம் கொள்ள வேண்டும்” – வேதமூர்த்தி

“நுண்ணறிவிலும் தொழில்திறனிலும் இளைஞர்கள் நாட்டம் கொள்ள வேண்டும்” – வேதமூர்த்தி

656
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இந்திய இளைஞர்கள் நுண்ணறிவிலும் தொழில்திறனிலும் நாட்டம் கொள்ள வேண்டும். அதைப்போல, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறைக் காட்ட வேண்டும் என்றும் மலேசியத் தமிழ் அறவாரியத்தின் பணி தொடர வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

நம் சமுதாய இளைஞர்களுக்கு நான்காவது தொழில் புரட்சி மீதும் மென்பொருள்சார் நுண்ணறிவிலும் நாட்டம் ஏற்படும்படி செய்ய வேண்டும். காரணம், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையை இவைதான் வடிவமைக்கப்போகின்றன என்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மலேசியத் தமிழ் அறவாரியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக சமூக நலத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

ஜூன் 6-ஆம் நாள் வியாழக்கிழமை மாலையில் அறுநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்திய சமுதாயம் பின் தங்கிவிடக் கூடாது, நாட்டில் நிகழும் மாற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ப நம் சமுதாயமும் விளங்க வேண்டும் என்றார்.

#TamilSchoolmychoice

“கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இரப்பர் விலை பன்னாட்டுச் சந்தையில் வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, மலேசிய இரப்பர் உற்பத்தியிலும் பின்னடைவும் தேக்க நிலையும் ஏற்பட்டன. இதனால் பாதிப்பிற்கு ஆளான தோட்டப் பாட்டாளிகள் ஏறக்குறைய எட்டு இலட்சம் இந்தியர்கள் தோட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகர்ப்பகுதியை தஞ்சம் அடைய நேரிட்டது. ஈராயிரத்தாம் ஆண்டுவரை இந்த நிலை தொடர்ந்தது. அப்போதையத் தலைவர்கள் வீழ்ச்சி அடைந்த இரப்பர் விலையைப் பற்றித்தான் அக்கறைப் பட்டார்களே தவிர, பரிதவிப்பிற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்களின் மீட்சி பற்றி சிந்திக்கவில்லை” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

இன்றைய சூழ்நிலையில் இந்திய சமுதாய இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கும் தொழில் திறனுக்கும் முன்னுரிமை அளிப்பதன்வழி, எதிர்கால வாழ்க்கைக்கு தங்களை தகவமைத்துக் கொள்ளலாம். இந்தத் தகவலை, இந்திய சமுதாயத்திடம் தமிழ் அறவாரியம் கொண்டு சேர்க்க வேண்டும்; குறிப்பாக, பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருக்கும் ‘பி-40’ தரப்பினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி தனதுரையில் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சுரேஷ் சிங், ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் சு.இராமகிருஷ்ணன், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.