Home உலகம் வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்

940
0
SHARE
Ad

சியோல் – தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

வடகொரியாவில் கால் பதிக்கும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் டொனால்ட் டிரம்ப்.

அந்த இரு தலைவர்களும் அணுஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு ஒப்புக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தில் நுழைந்த டிரம்ப் அங்கிருந்து கிம் ஜோங் உன்னுடன் நடந்து சென்று வட கொரியப் பகுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் மீண்டும் தென் கொரியப் பகுதிக்குத் திரும்பினார். அவர்களுடன் அங்கு தென் கொரிய அதிபர் முன் ஜே இன்-னும் கலந்து கொள்ள, மூவருக்கிடையிலான வரலாற்றுபூர்வ சந்திப்பு இன்று நடந்தேறியது.

அதன் பின்னர் டிரம்பும் கிம் ஜோங் உன்னும் சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் நேரடியாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.

டிரம்புக்கும், கிம் ஜோங்குக்கும்  இடையிலான முதல் சந்திப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.

அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற்றது. எனினும் அந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இன்றைய சந்திப்பு சிறந்த முறையில் நடந்தது என்றும் விரிவாக விவகாரங்ளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.