புத்ராஜெயா: ஆப்பிரிக்கத் தொழிலாளர்களை தோட்டத் துறைக்கு கொண்டு வரும் திட்டம் தொடராது என்று மனிதவளத் துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
தனது கருத்தானது தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டதாகவும், கடந்த ஜூன் 28-ஆம் தேதியன்று விவசாயிகளுடனான உரையாடலின் போது, இந்த விசயம் தோட்ட உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
21 நாட்களுக்குள் செம்பனையை பதப்படுத்துவதற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாக அவர்கள் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.
“தொழிலாளர்கள் பற்றாக்குறையால் செம்பனைப் பழங்கள் முழுமையாக பதப்படுத்தப்படாத நிலை எற்பட்டு, ஆண்டுக்கு சுமார் 10 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை விவசாயத் துறை சந்திக்கிறது” என்றும் அமைச்சர் கூறினார்.
“தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, ஆப்பிரிக்கர்களை அழைத்து வர அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று தோட்ட உரிமையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்” என்று குலசேகரன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து கருத்துரைத்த பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இது ஒரு பரிந்துரை மட்டுமே என்று கூறினார். மேலும், அது தேவையற்றது என்று தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும் அது இன்னும் நடக்கவில்லை என்றும் குலசேகரன் கூறினார். இது குறித்து கருத்துரைத்த முன்னாள் மனிதவள அமைச்சர் சுப்ரமணியம், இவ்வாறான முடிவுகள் எடுப்பதற்கு முன்பதாக இதன் தாக்கங்களை ஆராய வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.