கோத்தா கினபாலு – விரைவில் நடைபெறவிருக்கும் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடும் என அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலைப் போன்றே,
- தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதைப் போல் தீபகற்ப மலேசியாவில் நம்பிக்கைக் கூட்டணிக்கு எதிராக வீசும் அதிருப்தி அலைகள் சபா மாநிலத்திலும் வீசுகின்றனவா?
- சபா மாநிலத்தில் அம்னோவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறதா?
- ஆட்சி அமைத்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் சபாவை ஆளும் நம்பிக்கைக் கூட்டணி உறுப்பியக் கட்சியான பார்ட்டி வாரிசான் சபாவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அதைக் கொண்டு கிமானிஸ் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா?
- நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்கிடையே சபா மாநிலத்தில் ஒற்றுமை நிலவுகிறதா? அவை ஒன்றுபட்டு கிமானிஸ் தொகுதியை வென்று காட்ட முடியுமா?
என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கப் போகிறது கிமானிஸ் இடைத் தேர்தல்.
அதே வேளையில் கிமானிஸ் தேர்தல் முடிவுகள் பல புதிய கேள்விகளை உருவாக்கப் போகும் களமாகவும் அமையக் கூடும்.
1999-ஆம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளாக அனிபா அமான் தற்காத்து வந்த தொகுதி கிமானிஸ். 2018 பொதுத் தேர்தலில் அவர் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியைத் தொடர்ந்து அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இயங்கி வந்தார்.
அவரது சகோதரரும் சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான டான்ஸ்ரீ மூசா அமானும், பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளார்.
எனவே, கிமானிஸ் தொகுதியில் இருக்கும் அனிபா அமானின் ஆதரவு வாக்குகளை அம்னோ மீண்டும் பெறமுடியுமா? அல்லது அந்த வாக்குகளை ஆளும் பார்ட்டி வாரிசான் சபா அறுவடை செய்யுமா?
என்பது போன்ற கேள்விகளுக்கும் கிமானிஸ் இடைத் தேர்தல் முடிவுகள் விடையளிக்கும்!