Home நாடு ‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

2009
0
SHARE
Ad

(எதிர்வரும் டிசம்பர் 22-ஆம் தேதி “வல்லினம் விருது விழா” நடைபெறவிருக்கும் வேளையில், வல்லினம் இலக்கியக் குழுவின் தோற்றுநரும் மலேசிய எழுத்தாளருமான ம.நவீன் அண்மையில் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் மறுபதிவேற்றம் இது)

கேள்வி: ‘பேய்ச்சி’ உங்களின் முதல் நாவல். ஏன் இதற்கு முன் நாவல் எழுத முயலவில்லை.

ம.நவீன்: 2004இல் என் முதல் நாவலை எழுதினேன். ஒரு போட்டிக்கு எழுதி பரிசும் பெற்ற நாவல் அது. ஆனால் பின்னர் அதை வாசித்தபோது நாவலுக்கான தன்மை இல்லை எனத் தோன்றியது. அந்நாவலை வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனும் மேலும் அதனை மேம்படுத்த வேண்டும் எனக்கூறிவிட்டார். எனவே அதை நாவலாகப் பதிப்பிக்கவில்லை.

#TamilSchoolmychoice

கேள்வி: பேய்ச்சி எழுதும் திட்டம் எப்படி உருவானது?

ம.நவீன்: இவ்வருடம் நான் எழுத ஆரம்பித்த நாவல் பேய்ச்சியல்ல. அது ஒரு ஓவியரின் கதை. அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் சில தகவல்கள் கிடைக்காமல் நிறுத்தி வைத்திருந்தேன். மே மாதம் ஊட்டி முகாமுக்குச் சென்றேன். அதற்கு முன்பே பலமுறை எழுத்தாளர் ஜெயமோகன் என்னை நாவல் எழுத கூறியுள்ளார். இம்முறை அவர் துணைவியார் அருண்மொழி நங்கையும் நாவல் எழுதும்படி வலியுறுத்திக் கூறினார். அது அன்னையின் கட்டளை. அன்னையின் கட்டளையை மீறக்கூடாது. மே மாத இருவார  பள்ளி விடுப்பில் நாவலை எழுதி முடித்தேன்.

கேள்வி: இருவாரத்தில் நாவலை எழுதுவது சாத்தியம்தானா?

ம.நவீன்: நான் இயல்பாகவே வேகமாக டைப் செய்யக்கூடியவன். சிந்திக்கும் வேகத்தில் டைப் செய்வேன். நாவலின் முழுமையான கட்டமைப்பு இருவாரத்தில் அமைந்தது. அதன் பின்னர் எடிட்டிங் பணிகள் மட்டும் நான்கு மாதங்கள்.

கேள்வி: நாவல் எழுதுவதைவிட எடிட்டிங் அதிக காலம் எடுத்துள்ளது அல்லவா?

ம.நவீன் : ஆமாம். நாவல் எழுதும் பணியில் நான் கண்டுகொண்டது அது என்னை மீறி நிகழ்கிறது என்பதையே. நானே ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன என்ற ஆவலோடுதான் எழுத அமர்வேன். அந்த ஆவல்தான் என்னை எழுதவும் வைத்தது. எனவே வரலாற்றுப்பிழைகள் தகவல் பிழைகள் நாவலில் வரக்கூடும் என்ற பயம் இருந்தது. அவற்றை கவனமாக வாசித்து மேம்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து நடந்தன.

கேள்வி: ‘பேய்ச்சி’ நாவலின் கரு என்ன?

ம.நவீன் : அப்படி மையமிட்ட கரு என சொல்லிவிட முடியாது. 1981இல் லுனாஸில் சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கலாம். நான் அங்குப் பிறந்து வளர்ந்தவன். அந்த வரலாற்றுப் பின்புலத்தில் அமைந்த நாவல் இது. ஆனால் நாவலின் தேவை வரலாற்றை மட்டும் சொல்வதல்ல. கட்டுரையே அதற்கு பொருத்தமான வடிவம். வரலாற்றை மறு நிகழ்வு செய்து அதற்குள் பதில் தெரியாத வாழ்வின் சிக்கலான கேள்விகளை நோக்கி நகர்த்தி பார்ப்பது. எனக்கு பெண்கள் அவ்வாறு சிக்கலான கேள்வியாகத் தெரிகிறார்கள். அவர்களால் பேரன்பையும் பெருங்கருணையையும் காட்ட முடிவதுபோலவே முற்றழிவையும் உருவாக்க முடியும். அதுதான் பேய்ச்சி.

கேள்வி: முதலிலேயே கேட்க நினைத்தேன். பேய்ச்சி என ஏன் தலைப்பிட்டீர்கள்?

ம.நவீன்: என் அம்மாவின் பெயர் பேச்சாயி. என் தாய்வழி குலதெய்வம் பேச்சியம்மன். குலதெய்வ வழிபாடு விடுபட்டதால் இதுவே எனக்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்தது. மேலும் நான் மதம் சார்ந்த எவ்வித சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் லுனாஸில் என் பொழுதுகள் அதிகம் கோயிலில்தான் கழிந்துள்ளன. லுனாஸ் தோட்ட மாரியம்மனை நெகிழ்ச்சியுடன் நின்று வணங்கிய பொழுதுகள் அநேகம். அறிவு என்பது வேறு. அது கல்வியால் சிந்தனையால் ஒரு விடயத்தைத் தேர்வு செய்கிறது. ஆனால் அன்னையை எந்த வடிவத்தில் கண்டாலும் ஏற்படும் பரவசம் அறிவுக்குக் கட்டுப்படாதது. இன்றும் நான் லுனாஸ் செல்கையில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்குவது உண்டு.  பேச்சியம்மன் குறித்து பல மூலங்களில் வாசித்தபோது பல்வேறு கதைகள் கிடைத்தன. அன்னையை ‘பேய்ச்சி’ என்றும் அழைப்பதாகத் தகவல் கிடைத்தது. அதற்கான காரணிகளை ஆராய்ந்தபோது எல்லா அன்னையர்க்குமே பேய்ச்சி பொதுவான படிமம் எனத் தோன்றியது.

கேள்வி: நாவலை வாசித்தவர்கள் என்ன கருத்துசொன்னார்கள்?

ம.நவீன்: இதுவரை ஆரோக்கியமான கருத்துகளே வந்துள்ளன. ஆனால் சொன்னவர்கள் பலரும் எழுத்தாளர்கள் என்பதால் அவற்றை அவர்கள் எழுத்தின்வழி பதிவு செய்வதே சரியானது. காரணம் விரிவாக எழுதும்போதுதான் அதன் எல்லா கூறுகளையும் கவனித்து போதாமைகள் இருந்தாலும் குறிப்பிடக்கூடும்.

கேள்வி: விமர்சனங்களை எப்படி எதிர் கொள்வீர்கள்?

ம.நவீன்: நான் விமர்சனத்தால் என்னை வளர்த்துக்கொண்டவன்தான். சிலர் விமர்சனம் தனக்கு அவசியம் இல்லை என்பர். சிலர் விமர்சனங்களை வாசிப்பதில்லை என்பர். தமிழ் இலக்கியத்தில் இதுவரை நிகழ்ந்துள்ள சாதனைகளுக்கு நடுவில் நானெல்லாம் ஒரு ஆளே இல்லை. எனவே எந்த நோக்கத்திற்கு எழுதப்பட்டாலும் நான் விமர்சனங்களை வாசித்து அதன் வழி என்னை மேம்படுத்தவே முயல்கிறேன்.

கேள்வி: நூல் வெளியீடு குறித்து கூறுங்கள்.

ம.நவீன்: இம்மாதம் 20ஆம் திகதி. மாலை 6 மணிக்கு கெடா சுங்கை கோப் மலையில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் ஆசிரமத்தில் என் பேய்ச்சி நாவலுடன் சீ.முத்துசாமியின் மலைகாடு நாவலும் வெளியீடு காண்கிறது. சு.வேணுகோபால் மலைக்காடு குறித்தும் அருண்மொழி நங்கை பேய்ச்சி குறித்தும் பேசுகிறார்கள். ஜெயமோகன் ‘நாவல் எனும் கலை’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.