டெஹ்ரான் – 176 உயிர்களைப் பலிவாங்கிய உக்ரேன் விமான விபத்துக்குக் காரணம், தாங்கள் அந்த விமானத்தைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதே என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர், தொழில்நுட்பக் காரணங்களால்தான் உக்ரேன் விமானம் விபத்துக்குள்ளானது என ஈரான் கூறி வந்தது.
கடந்த புதன்கிழமை ஜனவரி 8-ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானம் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு பேரிடர் என ஈரானிய அதிபர் ஹசான் ரவுஹானி வர்ணித்தார்.
ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சொலைமணி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தினால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு பதிலடியாக ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகள் தங்கயிருக்கும் பகுதிகளில் ஏவுகணைகளைப் பாய்ச்சித் தாக்கியது. அந்த ஏவுகணைகளில் ஒன்றுதான் உக்ரேன் விமானத்தைத் தவறுதலாகத் தாக்கி வீழ்த்தியது என உளவுத் தகவல்களைத் தாங்கள் பெற்றிருப்பதாக கனடாவின் பிரதமர் ஹென்ரி டுருடோ தெரிவித்திருந்தார்.
ஈரானின் இன்றைய ஒப்புதலைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் உக்ரேனின் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உண்மை வெளிவந்திருப்பதால், ஈரான் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, இதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் நல்லுடல்களை உரிய நாடுகளிடம் ஒப்படைப்பதோடு, இதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும் எனவும், அதிகாரபூர்வ மன்னிப்பை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரவேண்டும் என்றும் உக்ரேன் அதிபர் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.