Home One Line P1 மகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு

மகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு

755
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இஸ்லாம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட தனது மகள் பிரசனா டிக்‌ஷாவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் காலம் கடத்தும் காவல்துறையின் தலைவர் (ஐஜிபி) என்ற முறையில்  டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் மீது 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி இந்திரா காந்தி வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் தொடுக்கப்படும் என இந்திரா காந்தியின் வழக்கறிஞர்கள் குழுவும் மற்றும் அவரது மகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுவும் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் இணைய ஊடகச் செய்தி தெரிவித்தது.

இந்திரா காந்தி நடவடிக்கைக் குழுத் தலைவர் அருண் துரைசாமி இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டில் ஈப்போ உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக ஐஜிபி மீது இந்த வழக்கு தொடுக்கப்படுவதாகவும் அருண் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்யவேண்டும் என்றும், பிரசனாவை மீட்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு ஈப்போ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

“ஐஜிபி உதட்டளவில் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து பிரசனாவைக் கண்டுபிடிப்பதற்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்” என்றும் அருண் துரைசாமி கூறியிருக்கிறார்.

2009-ஆம் ஆண்டில் 11 மாதமாக இருந்த காலகட்டத்தில் பிரசனாவை முகமட் ரிடுவான் தன்னுடன் கொண்டு சென்றார். அதன் பிறகு இதுவரையில் அவர் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

பிரசனாவைக் கண்டுபிடிப்பதிலும், முகமட் ரிடுவானைத் தேடுவதற்கும் காவல் துறையினர் தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கியிருக்கின்றனர் என ஐஜிபி தனது பேட்டிகளில் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்.

இந்திரா காந்தி தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் வேளையில் அவரது மூன்றாவது பிள்ளையான பிரசனாவுடன் காணாமல் போன முகமட் ரிடுவான் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.