லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) ஹெலிகாப்டர் விபத்தில் தனது மகளுடன் மரணமடைந்த கோபே பிரியாண்ட் கூடைப் பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் வணிகத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் அவர் பணம் ஈட்டினார் என்பது அவரைப் பற்றிய இன்னொரு தகவல்.
பொதுவாக அமெரிக்க விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுவார்கள். விளம்பரங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வசூலிக்கும் சிறப்புக் கட்டணம், பயிற்சி தர, பயிற்சியாளராக பணிபுரிய மற்றும் விளையாட்டு சாதனங்களில் தங்களின் பெயர்களை வணிக முத்திரைகளாகப் பதிக்க – என பல முனைகளிலும் அவர்கள் கோடிக்கணக்கில் வருமானத்தைப் பெறுவார்கள்.
கூடைப்பந்து போட்டிகளில் பங்கு பெற்ற காலகட்டத்திலேயே கோபே 300 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டினார் என புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
கூடைப் பந்து போட்டிகளில் இருந்து கோபே பிரியாண்ட் ஓய்வு பெற்றவுடன் பிரபலமான விளையாட்டுத் துறை சாதனங்களுக்கான நிறுவனம் நைக்கி ( Nike Inc) “கோபே பிரியாண்ட்” பெயரில் பல பொருட்களை விற்பனை செய்து வந்தது. கோபே பிரியாண்ட் மரணச் செய்தி வெளியானது முதல் அவரது முத்திரை பதித்த எல்லாப் பொருட்களும் தங்களின் இணையத் தளத்தில் இருந்து விற்பனையாகி விட்டதாக நைக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி28) அறிவித்திருக்கிறது.
விளையாட்டுத் துறையிலிருந்து விலகியவுடன் ஒரு முதலீட்டாளராக மாறிய கோபே பிரியாண்ட் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் குறிப்பாக சீனா ஆகிய வட்டாரங்களில் தலைசிறந்த, புத்திசாலித்தனமான வணிகராக மாறினார்.
வணிகத்தில் இறங்குவதற்கு முன்னர் அது குறித்த எல்லா நூல்களையும், காணொளித் தகவல்களையும், உரைகளையும் ஆர்வத்துடன் படித்துத் தெரிந்து கொண்டார் கோபே.
கால ஓட்டத்தில் முதலீட்டு நிறுவனம், பல்முனை ஊடகத் தயாரிப்பு (மல்டி மீடியா), விளையாட்டுகளுக்கான பயிற்சி மையங்கள், நூல்கள், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு என பலதரப்பட்ட வணிக முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார் கோபே.
தான் இறங்கிய வணிக முயற்சிகள் அனைத்திலும் ஒரு நல்ல சமூக நோக்கம் இருக்குமாறு கோபே பிரியாண்ட் உறுதிப்படுத்திக் கொண்டார்.
அவரது முதலீட்டு நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட நிதியை நிர்வகித்து வந்தது.
போடி ஆர்மர் (BodyArmor) என்ற விளையாட்டாளர்களுக்கான பானம் தயாரிப்பை அவர் 6 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 2014-இல் தொடங்கினார். 2018-இல் கோகோ கோலா நிறுவனம் அந்த நிறுவனத்தில் சிறுபான்மை பங்குகளை வாங்கிய காலகட்டத்தில் கேபேயின் பானம் தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு 200 மில்லியனாக உயர்ந்திருந்தது.
“மியூஸ்” (Muse) என்ற பெயரில் கூடைப்பந்து விளையாட்டில் இளம் வயதுமுதல் தான் சந்தித்த அனுபவங்களை ஆவணப் படமாகத் தயாரித்து அதனை இணையத் தளம் மூலம் விற்பனை செய்து வந்தார்.
2015-ஆம் ஆண்டில் சீனாவின் இணையவழி விற்பனை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தனது பெயரிலான விளையாட்டு சாதனங்களை விற்பனை செய்து வந்தார்.
2013-ஆம் ஆண்டில் ஹாலிவுட்டிலும் நுழைந்த கோபே அங்கு பல்வேறு படத் தயாரிப்பு, தொலைக்காட்சி தயாரிப்புகளிலும் ஈடுபட்டார்.
அவரது 13 வயது மகள் ஜியானா விளையாடி வந்த கூடைப்பந்து குழு ஒன்றுக்கும் பயிற்சியாளராக கோபே விளங்கி வந்தார். கோபேயுடன் அவரது மகளும் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்.
“தி மம்பா மென்டாலிடி” (The Mamba Mentality) என்ற பெயரில் தனது கூடைப்பந்து விளையாட்டு அனுபவங்களை நூலாகவும் எழுதி 2018 – இல் வெளியிட்டார் கோபே. அந்த நூலும் அதிகமான அளவில் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை அவரது மரணச் செய்தி வெளியானதும் அமேசோன் இணையத் தளத்தில் அதிகம் விற்கப்பட்ட நூலாக அது திகழ்ந்தது. அச்சு வடிவத்திலான அந்த நூல்கள் அனைத்தும் கடைகளில் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு விற்றுத் தீர்ந்தன.