கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றம் புஜூட் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சன்னின் தகுதியை இரத்து செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் எதுவும் நடைபெறாது என்று சரவாக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமட் அஸ்பியா அவாங் நாசர் தெரிவித்தார்.
சரவாக் அரசியலமைப்பின் பிரிவு 21 (5)-இன் படி, மாநில சட்டமன்ற சபாநாயகர் என்ற முறையில், இந்த முடிவைத் தொடர்ந்து காலியாக உள்ள இடத்தை அறிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் காலியிடங்கள் ஏற்பட்டால், காலியிடம் நிரப்பப்படாது. ஒரு வேளை சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தாலொழிய, ஆளும் கட்சியின் பெரும்பான்மை குறைந்து காணப்பட்டால் இது சாத்தியம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
“சபாநாயகர் தேர்தல் ஆணையத்திற்கு எழுத வேண்டிய அவசியம் எழவில்லை. ஆகவே, இடைத்தேர்தல் இருக்காது” என்று நேற்று செவ்வாய்க்கிழமை இங்குள்ள மாநில சட்டமன்ற கட்டிடத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இரட்டை குடியுரிமை தொடர்பாக, சரவாக் மாநில சட்டமன்றம், டாக்டர் திங்கை புஜூட் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவதை நிறுத்தியது சரியான முடிவு என ஒன்பது பேர் கொண்ட நீதிபதி குழு செவ்வாயன்று தீர்ப்பளித்தது.