Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை: முக்கிய அரசியல்வாதி வாக்குமூலம் அளிக்க உள்ளாரா?

கடலடி சுரங்கப்பாதை: முக்கிய அரசியல்வாதி வாக்குமூலம் அளிக்க உள்ளாரா?

624
0
SHARE
Ad
படம் நன்றி: டி ஸ்டார்

ஜார்ஜ் டவுன்: ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அலுவலகம் பத்திரிகையாளர்களின் மையப் புள்ளியாக மாறியது.

முக்கிய அரசியல்வாதி, 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய கருத்துகளுக்குப் பின்னர் பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.

இந்த செய்தியை உறுதிப்படுத்த எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோ அசாம் பாக்கி மற்றும் மாநில எம்ஏசிசி இயக்குனர் லிம் பீ கீன் ஆகியோரை அணுகும் முயற்சிகள் தோல்வியடைந்தன என ஸ்டார் இணைய ஊடகம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், இந்த வழக்கை புத்ராஜெயாவைச் சேர்ந்த சிறப்பு எம்ஏசிசி குழுவினர் விசாரித்து வருவதாகவும், விசாரணையின் நோக்கம் முக்கியமாக பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத செயல்பாட்டுச் சட்டத்தின் வருமானம் (அம்லா) ஆகியவற்றுக்குக் கீழ் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெரிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட சில வணிகர்களின் பல வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அதிகாரிகளால் முடக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செவ்வாயன்று, முதலமைச்சர் சௌ கோன் யோவ் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தமது வாக்குமூலத்தை அளித்தார்.

படம்: பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யோவ்

அதற்கு ஒரு நாள் முன்னதாக, மூன்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய எம்ஏசிசி அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் மாநில வீட்டுவசதி, நகரம், நாடு திட்டமிடல் மற்றும் ஊராட்சிக் குழுத் தலைவர் ஜகதீப் சிங் தியோ; பெண்கள், குடும்ப மேம்பாடு மற்றும் பாலின உள்ளடக்கம் குழுத் தலைவர் சோங் எங்; சமூக நலன், கவனிப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் பீ பூன் போ ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கொம்தாரில் உள்ள மாநில பொதுப்பணித்துறை, பயன்பாடுகள் மற்றும் வெள்ளத்தைக் குறைக்கும் குழுத் தலைவர் சைய்ரில் கிர் ஹொஜாரி மற்றும் துணை முதல்வர் பி. இராமசாமி ஆகியோரின் அலுவலகங்களையும் எம்ஏசிசி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பினாங்கு துறைமுக ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ் இந்த வழக்கின் விசாரணைக்காக ஜூலை 1- 4 முதல் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

படம்: பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ்

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.