Home வணிகம்/தொழில் நுட்பம் கார் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது – தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் புரோட்டோன் அதிகாரி...

கார் விலைகளை உடனடியாக குறைக்க முடியாது – தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் புரோட்டோன் அதிகாரி கருத்து

631
0
SHARE
Ad

Proton-Logoகோலாலம்பூர், ஏப்ரல் 14 – மலேசியாவில் கார்களின் விலைகளை திடீரென்றோ, உடனடியாகவோ, குறைக்க முடியாது என்றும் அப்படி செய்தால் மலேசியாவில் கார் தொழில் எல்லா நிலைகளிலும் பாதிப்படையும் என்றும் புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ சைட் ஜைனால் அபிடின் சைட் முகமட் தாஹிர் கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

கார்களின் விலைகளைக் குறைப்போம் என்று மக்கள் கூட்டணி தலைவர்கள் மேடைகள் தோறும் முழங்கி வரும் நிலையில் மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் கார்களின் விலைகள் குறைக்கப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணியும் கார்களின் விலைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவிப்புகள் செய்து வருகின்றது.

இது தொடர்பாக கருத்துரைத்த சைட் ஜைனால், கார்களின் விலைகளைக் குறைப்பதற்கு முன்னால் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார்.

கார் தொழில் பல நிலைகளில் பல முதலீட்டாளர்களைக் கொண்ட ஒரு பெரிய தொழில் என்பதால் உடனடியாகவோ, திடீரென்றோ கார்களின் விலைகளைக் குறைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“கார்களின் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, கார்களின் உபரி பாகங்களைத் தயாரிப்பவர்களும் கார் விலைக் குறைப்பினால் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டில் கார்களின் விலைகள் 5 சதவீதம் குறைக்கப்பட்டபோது அதனால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகளும் சந்தையில் 10 சதவீதம் வரை குறைந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று சைட் ஜைனால் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, புதிய கார்களின் விலையைக் குறைக்கும் போது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான சந்தையையும் சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.