கோத்தா கினபாலு : சபாவில் ஏற்பட்டிருக்கும் திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் நேற்று புதன்கிழமை (ஜூலை 29) இரவு சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடினைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பை தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஷாபி அப்டால் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
அப்போது சபாவுக்கு திடீர் தேர்தலை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆளுநருடன் நேற்று நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட பல்வேறு விவகாரங்களில் சபா மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை நடத்துவது குறித்தும் ஷாபி அப்டால் விவாதித்தார் சபா அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
சபா மாநிலத்தில் புதிய மாநில அரசாங்கத்தை அமைக்க தனக்குப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என அம்னோவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் மூசா அமான் அறிவித்ததைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் ஷாபி அப்டால் ஆளுநரை சந்தித்தார்.
ஷாபி அப்டாலின் ஆளுநருடனான சந்திப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு 11.00 மணிக்கு ஷாபி அப்டால் ஆளுநரின் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
அந்த சந்திப்பின்போது சபா மாநில தலைமை அரசாங்க வழக்கறிஞர் பிரெண்டன் கெயித் சோ உடன் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சபா மாநில சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலுக்கு ஷாபி அப்டால் வழி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த முடிவுக்கு சபா ஆளுநர் ஒப்புக் கொண்டாரா என்பது தெரியவில்லை.
சபாவில் ஏற்பட்ட திடீர் அரசியல் திருப்பம்
நேற்று புதன்கிழமை புதன்கிழமை (ஜூலை 29) சபா மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சபா மாநிலத்தில் தற்போது நடப்பிலிருக்கும் ஷாபி அப்டால் அரசாங்கம் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினர் மூசா அம்மானின் தலைமையில் புதிய மாநில அரசாங்கம் அமையவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன
ஷாபி அப்டால் தலைமையிலான பார்ட்டி வாரிசான் சபா கட்சி தற்போது சபா மாநிலத்தை ஆட்சி செய்கிறது. இந்நிலையில் சபா முதலமைச்சராக முன்பு பணியாற்றிய மூசா அமான் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு போதிய பெரும்பான்மை தனக்கு இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதைத் தொடர்ந்து சபாவில் எந்நேரத்திலும் ஷாபி அப்டால் ஆட்சி கவிழலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
எனினும், தனக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக ஷாபி அப்டாலும் அறிவித்திருக்கிறார்.
ஊழல் புகார்களில் இருந்து மூசா அமானுக்குக் கிடைத்த விடுதலை
அண்மையில் ஊழல் புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த மூசா அமான் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அரசாங்கச் சட்டத் துறைத் தலைவரால் விடுவிக்கப்பட்டார்.
எனினும் அதைத் தொடர்ந்து சபாவின் முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் சபா அறவாரியத்துக்குச் சொந்தமான 872 மில்லியன் ரிங்கிட்டை திரும்பவும் வழங்க வேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டது.
சபா சபா அறவாரியமே இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சபா அறவாரியத்துக்குச் சொந்தமான வெட்டுமர உரிமங்களின் மூலம் அந்த அறவாரியத்துக்குச் சேரவேண்டிய தொகை இது என்ற முறையில் மூசா அமான் மீது வழக்கு தொடரப்பட்டது.
மூசா அமானும் பதிலடியாக 1 பில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோடு சபா அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுத்தார்.
சபா மாநிலத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கூடுதலாக 5 பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் ஆளும் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவர்.
பெரும்பான்மைகளைக் கொண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படுமா?
அல்லது ஷாபி அப்டாலின் நடப்பு அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமா?
சபா மாநிலத்தில் திடீர் தேர்தல் நடைபெறுமா?
என்பது போன்ற கேள்விகளுக்கு இன்றைக்குள் விடைகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.