கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா மீண்டும் சுமுகமாக செயல்படுவதற்கு சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இதனை ஏர் ஆசியாவின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
இந்த நிதியைக் கொண்டு 2021-ஆம் ஆண்டு இறுதிவரை ஏர் ஆசியா செயல்பட முடியும்.
கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து தனது பயணங்களில் 95 விழுக்காட்டை ஏர் ஆசியா இரத்து செய்ய வேண்டியிருந்தது.
2021-ஆம் ஆண்டு இறுதிவரை செயல்படுவதற்கு குறைந்த பட்சம் 2 பில்லியன் ரிங்கிட் தேவைப்படுவதாக டோனி பெர்னாண்டஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் மலேசிய வங்கிகள் இணைந்து 1 பில்லியன் டாலர் கடன் வசதிகளை ஏர் ஆசியாவுக்கு வழங்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மலேசிய அரசாங்கம் தங்களுக்கு பெருமளவில் ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் டோனி பெர்னாண்டஸ் அறிவித்திருக்கிறார்.
அடுத்த இரண்டு மாதங்களில் உறுதியான அறிவிப்பு ஒன்றைச் செய்ய முடியும் என்று கருதுவதாகவும் இதன் மூலம் ஏர் ஆசியாவுடன் தொடர்புடைய 24,000 வேலைகளைக் காப்பாற்ற முடியும் என்றும் டோனி பெர்னாண்டஸ் அண்மையில் முகநூல் வழி அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
“கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதால் எங்களுக்கு ரொக்கக் கையிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்நிலையில் முன்கூட்டியே பயணத்துக்கான இருக்கைகளை பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. முதலில் எங்களுக்கு கடன் உதவிகள் வந்து சேரவேண்டும். எனது முதல் கடமை எனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது. அடுத்தது ஏர் ஆசியா தடங்கலின்றித் தொடர்ந்து செயல்படுவது. அதன் பின்னரே மற்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதுவரையில் பயணிகள் பொறுமை காக்க வேண்டும்” என்றும் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
பயணிகளுக்கான திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை மாற்று சேவைகளுக்காக மாற்றிக்கொள்ளவும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கான திட்டம் ஒன்றும் வரையப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணங்களை பயணிகள் ஏர் ஆசியாவின் மற்ற சேவைகளுக்கான கட்டணங்களுக்கு செலுத்த முடியும் என்றும் டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.