Home One Line P1 அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை

அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை

622
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்துதலுக்கு உட்படாத விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது.

இதனை காவல் துறைத்தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அவர் இந்தத் தகவலை வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்ததாக பெர்னாமா  செய்தி வெளியிட்டது.

#TamilSchoolmychoice

தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சரான கைருடின் மீது இதுவரையில் 27 புகார்களை காவல்துறை பெற்றுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சட்டத்தின்கீழ் இந்த புகார்கள் விசாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையில் கைருடின் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட வேண்டுமென அம்னோ தலைவர்கள் சிலரே அறைகூவல் விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டபோது கைருடின் இது குறித்து மேலும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

சுகாதார அமைச்சின் அறிக்கை அதைத் தொடர்ந்து தான் வெளியிட்ட சொந்த அறிக்கை ஆகிய இரண்டில் மட்டுமே தான் உறுதியாக இருப்பதாகவும் வேறு கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

விஸ்வரூபம் எடுக்கும் கைருடின் விவகாரம்

தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துருக்கியில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின்படி அவர் அதன் பின்னர் 14 நாட்களுக்கான தனிமைப்படுத்தலைப் பின்பற்றவில்லை.

இதைத்தொடர்ந்து எதிர்க் கட்சிகளிடம் இருந்தும் சமூக ஊடகங்களில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து செபுத்தே சிபி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் நாடாளுமன்றக் கூட்டத்திலும் கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார்.

இதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) வெளியிட்ட அறிக்கையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமைச்சர் மீறி இருக்கிறார் என உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அவருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது எனவும் தனது அபராதத்தை அவர் செலுத்தி விட்டதாகவும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தெரெசா கோக்

இதற்கிடையில் அமைச்சர் கைருடினும் தனியாக விடுத்த அறிக்கை ஒன்றில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காகவும் நடந்த தவறுக்காகவும் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான தனது அமைச்சருக்கான சம்பளத்தை கொவிட் -19 நிதிக்காக வழங்குவதாகவும் கைருடின் தெரிவித்தார்.

அமைச்சர் என்ற முறையில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நானும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளேன் எனவும் கைருடின் குறிப்பிட்டார்.

ஏற்கனவே எல்லா அமைச்சர்களும் தங்களின் மார்ச், ஏப்ரல் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கியிருக்கின்றனர்.

துருக்கியில் இருந்து நாடு திரும்பியதும் ஜூலை ஏழாம் தேதி அன்று கைருடினுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் சுகாதார அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

அதன்பிறகும் இரண்டு முறை அவர் கொவிட்-19 தொற்று பரிசோதனைகளை செய்துகொண்டார் என்றும் இரண்டு முறையும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது எனவும் சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

திரெங்கானு மாநிலத்தில் உள்ள கோல நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கைருடின் பாஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் எத்தகைய குற்றங்களை மீறினார் என்பது போன்ற விவரங்களை சுகாதார அமைச்சு வெளியிடவில்லை.

கைருடினோடு துருக்கியிலிருந்து நாடு திரும்பிய குழுவினர்களில் மற்றவர்களுக்கும் இதே போன்ற அபராதம் விதிக்கப்பட்டதா அவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்றினார்களா என்பது போன்ற விவரங்களையும் சுகாதார அமைச்சு விளக்கவில்லை.

கஸ்தூரி பட்டுவின் கண்டனம் – தொடர்ந்து எழும் கேள்விகள்…

கஸ்தூரி ராணி பட்டு – பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறும் சாதாரண பொதுமக்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை என விதிக்கப்படும் நிலையில் அமைச்சர் ஒருவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? இதுதான் அரசாங்கம் காட்டும் முன்னுதாரணமா? என பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின் கஸ்தூரி பட்டு சாடியிருக்கிறார்.

“இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை அபராதமாக விதித்தால் கைருடின் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விடுவார் என்பதால் அவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறதா?” என்றும் கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.

சுகாதார அமைச்சின் நடவடிக்கையிலும், தாமதமான அறிக்கைகள் விடுத்தது குறித்தும் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் கைருடின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு இணையம் வழியான கையெழுத்து வேட்டையும் தொடங்கப்பட்டு, அதில் ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டு வருகின்றனர்.