Home One Line P1 அமைச்சருக்கான அபராதம் – எழும் கேள்விகள், சந்தேகங்கள்!

அமைச்சருக்கான அபராதம் – எழும் கேள்விகள், சந்தேகங்கள்!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அமைச்சர் கைருடின் அமான் ரசாலிக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டாலும் இந்த சர்ச்சை குறித்த கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கைருடின் தோட்டத் தொழில் மூலப் பொருட்களுக்கான அமைச்சராவார்.

செபுத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஐந்து நாட்களுக்குப் பின்னரே சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.

#TamilSchoolmychoice

ஓர் அமைச்சருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது உடனடியாக அறிவிக்கப்படாதது ஏன்?

தெரசா கோக் (படம்) நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியவுடனேயே அடுத்த நாளே அபராதம் விதிக்கப்பட்டதை அறிவித்திருந்தால் அரசாங்கம் – சுகாதார அமைச்சு மீது நன்மதிப்பு கூடியிருக்கும்.

கைருடின் ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் கலந்து கொண்டார்.

அதே சமயம் அவருடன் துருக்கி சென்று நாடு திரும்பிய மற்ற குழுவினரின் நிலைமை என்ன? அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதா? பரிசோதனை முடிவுகள் என்ன? என்பது போன்ற விவரங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதுவும் ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன!

அமைச்சருக்கு விதிக்கப்பட்ட அபராதம் கூட அவர்  துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன்  ஏறத்தாழ ஒரு மாதம் கழித்துத்தான் விதிக்கப்பட்டிருக்கிறது.

அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில்  எழுப்பப்பட்டு 15 நாட்களுக்குப் பின்னரே அறிக்கை வழி தெரிவிக்கப்பட்டது.

ஏன் இந்த இடைவெளி?

அதுவும் சமூக ஊடகங்களில் இணைய வாசிகள் பலத்த கண்டனங்களை எழுப்பியதன் பின்னர்தான் இத்தனை நாட்கள் இடைவெளி கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தெரசா கோக் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயம் சுகாதார அமைச்சுக்கோ, அமைச்சருக்கோ தெரியாதா?

தனிமைப்படுத்துதல் சட்டப்படி கட்டாயமாகும்

தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு சட்டங்களின்படி வெளிநாட்டிலிருந்து திரும்பும் ஒருவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் படவேண்டியது கட்டாயமாகும்.

நாடு திரும்பும் அவர்கள் அனைவரும் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

ஜூலை 24 முதல் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னால் வெளிநாட்டில் இருந்து திரும்பும் ஒருவர் தனது இல்லத்திலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள சட்டம் அனுமதித்தது

ஜூலை 24 முதல் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் அனைவரும் அரசாங்கம் நிர்ணயித்த மையங்களில் தனிமைப் படுத்தப்பட வேண்டும்.

கைருடினும் அவரது குழுவினரும் இத்தகைய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான் எழுந்திருக்கும் குற்றச்சாட்டு!

இல்லங்களில் சொந்தமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்ட பலர் அதை பின்பற்றாததால் கொவிட்-19 தொற்று பரவியது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் இனி இல்லங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது, அரசாங்க மையங்களில்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது.

சிவகங்கா தொற்று பரவுதல் இதற்கான சிறந்த உதாரணமாகும்.

சாதாரண மக்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் ஒருவரை பாதுகாக்கும் வகையில் –

பூசி மெழுகி மூடி மறைக்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதும் –

கேள்விகளையும், கண்டனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

உதாரணமாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி 72 வயதுடைய ஒரு பெண்மணிக்கு 8,000 ரிங்கிட் அபராதமும் ஒருநாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி சிவகங்கா தொற்று பரப்பிய 57 வயது நேசார் முகமட் சாபூர் பாட்சாவுக்கு 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் 5 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஒருவருக்கு வெறும் ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதும் –

அதை சுகாதார அமைச்சு பல நாட்கள் கழித்து அறிக்கையாக தெரிவிப்பதும் –

விளக்கப்பட வேண்டிய பல விஷயங்களை மூடி மறைப்பதும் ஏன் என சமூக ஊடகங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன!

பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவும் அமைச்சருக்கு விதிக்கப்பட்ட குறைவான அபராதத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், கைருடின் பதவி விலக வேண்டும் என தொடங்கப்பட்டிருக்கும் இணையம் வழியான கையெழுத்துப் போராட்டத்தில் இதுவரையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டிருக்கின்றனர்.