கோலாலம்பூர் : நாட்டின் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) ஜூன் 30 முடிந்த 2020 முதல் அரையாண்டில் 16.5 பில்லியன் ரிங்கிட் நிகர இழப்பை எதிர்நோக்கியிருக்கிறது.
பல்வேறு பிரச்சனைகள், வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலைகள் ஆகியவற்றின் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பெட்ரோனாஸ் மலேசிய அரசாங்கத்திற்கு செல்வம் கொழிக்கும் ரொக்க வங்கியாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அரசாங்கத்தின் முழு உடமை கொண்ட நிறுவனம் பெட்ரோனாஸ். இதன் காரணமாக அந்நிறுவனம் ஈட்டிய இலாபத்தில் பெரும்பங்கு இலாப ஈவாக அரசாங்கத்தின் நிதிக் கையிருப்பிற்கு சென்று சேர்ந்தது.
அந்தப் பணத்தைக் கொண்டு, பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெட்ரோனாஸ் வழங்கும் பணம் வருகிறதே என்று அரசாங்கம் பொருந்தாத பல திட்டங்களையும், மக்களுக்குப் பயன் தராத பல நடவடிக்கைகளையும் செயல்படுத்தியது.
இதற்காக, எதிக்கட்சிகளும் பலமுறை கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இந்த ஆண்டு இழப்பை எதிர்நோக்கியிருப்பதால், பெட்ரோனாஸ் வழங்கும் ஆண்டு இலாப ஈவு இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் என பெட்ரோனாஸ் அறிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு 28.9 பில்லியன் நிகர இலாபத்தை பெட்ரோனாஸ் ஈட்டியது. ஆனால் இந்த ஆண்டு அதன் வருமானமும் 23 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஓராண்டுக்கு முன்னர் 121.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டிய பெட்ரோனாஸ் இந்த ஆண்டு 93.6 பில்லியன் ரிங்கிட் வருமானத்தையே ஈட்டியது.
பெட்ரோலியம் தொடர்பான பொருட்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட எரிவாயு போன்றவற்றின் விற்பனை அளவு பெருமளவு குறைந்ததே பெட்ரோனாஸ் இழப்புக்கான காரணமாகும். இதற்கெல்லாம் கொவிட்-19 பாதிப்புகள்தான் மூலகாரணம் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.
கொவிட்-19 காரணத்தால் எண்ணெய் விலைகள் கடும் வீழ்ச்சியடைந்தன. ஓராண்டுக்கு முன்னால் 66.02 அமெரிக்க டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது சராசரியாக 39.73 டாலர் விலையில் விற்கப்படுகிறது.
ஏற்கனவே, கொவிட்-19 பிரச்சனைகளாலும், 1எம்டிபி பிரச்சனைகளாலும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மலேசிய அரசாங்கம் பெட்ரோனாசிடமிருந்து கிடைக்கக் கூடிய இலாப ஈவு கணிசமாகக் குறைந்தால் மேலும் கூடுதலான நிதி நெருக்கடியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் பதவியேற்றதும் பெட்ரோனாசை நிர்வகிக்க தெங்கு முகமட் தவுபிக் தெங்கு அசிஸ் என்பவரை தலைவராக நியமித்தார்.