Home One Line P1 ஆற்று நீர் மாசு: ஊழல் கூறுகள் உள்ளதா என்பதை எம்ஏசிசி விசாரிக்கும்

ஆற்று நீர் மாசு: ஊழல் கூறுகள் உள்ளதா என்பதை எம்ஏசிசி விசாரிக்கும்

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூரில் சுமார் 1.2 மில்லியன் வீடுகளில் நீர் விநியோகம் இல்லாமல் போனதை அடுத்து, சுங்கை கோங் மாசு சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

இந்த விஷயத்தில் அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்வது குறித்து, இந்த விசாரணை அறிக்கை திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விவகாரம் குறித்த தகவல்களைக் கொண்டவர்கள் முன்வந்து ஆணையத்துடன் ஒத்துழைக்குமாறு எம்ஏசிசி கேட்டுக் கொள்கிறது” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆற்று நீரின் மாசு குறித்த விசாரணையில் உதவ இரண்டு தொழிற்சாலை தொழிலாளர்கள் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் நான்கு நாட்களுக்கு நீர் விநியோகத் தடைக்கு வழிவகுத்தது.

தொழிற்சாலை மேலாளர்களான நான்கு சகோதரர்களும் இந்த வாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். சுற்றுச்சூழல் தரச் சட்டம் (சட்டம் 127) மற்றும் நீர் சேவைகள் தொழில் சட்டம் (சட்டம் 655) ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்படும்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி 90 விழுக்காடு இடங்களில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,292 இடங்களில் சுமார் 1,156 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பி உள்ளது.

மீதமுள்ள 136 இடங்களுக்கு நீர் விநியோகம் இன்னும் மீட்கும் பணியில் உள்ளது என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் 95.72 விழுக்காடு, கோம்பாக் 94.89 விழுக்காடு, கோலாலம்பூர் 85.02 விழுக்காடு மற்றும் கிள்ளான் / ஷா ஆலாமில் 59.32 விழுக்காடு பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூரில் 100 விழுக்காடு நீர் விநியோகம் மீட்டெடுத்துள்ளதாகவும் ஆயர் சிலாங்கூர் நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைதான் தூய்மைக் கேட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். அந்தத் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டதாகவும்,  அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.