Home One Line P1 எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை

எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கிய 101 திட்டங்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எந்த விசாரணை ஆவணங்களையும் தொடங்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி இன்று தெரிவித்தார்.

ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் குறித்து விசாரிப்பதே ஊழல் எதிர்ப்பு அமைப்பின் அதிகார வரம்பு என்று அவர் கூறினார். நிதி அமைச்சர் இந்த விஷயத்தை எழுப்பியபோது மக்களவையில் இரண்டு காரணிகளும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் கூறினார்.

“நாங்கள் இதுவரை எந்த விசாரணைகளையும் தொடங்கவில்லை, ஏனெனில் ஊழல் மற்றும் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிறுவனங்களை அடையாளம் காண்பது எளிதல்ல.

#TamilSchoolmychoice

“எனவே, நான் அதிகம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது முன்னர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தால் செய்யப்பட்ட ஒன்று தொடர்பானது, அவ்வளவுதான்.

“நாடாளுமன்றத்தில், 101 திட்டங்கள் தொடர்பான ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாங்கள் இன்னும் இத்திட்டங்களைப் படித்து வருகிறோம். என்னால் விரிவாக கருத்துத் தெரிவிக்க முடியாது, ”என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் 6.61 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 101 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அசிஸ் கடந்த மாதம் (ஆகஸ்டு 24) மக்களவையில் வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது, நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.61 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 101 திட்டங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் பொது குத்தகை இன்றி வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நிதி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் நிதி அமைச்சரும் பாகான் (பினாங்கு) நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் வழங்கப்பட்ட குத்தகைகளின் பட்டியலை வெளியிடுமாறு தெங்கு சாப்ருலுக்கு சவால் விடுத்தார்.

தனது பதவிக்காலத்தில் அவ்வாறு எத்தனை குத்தகைகள் நேரடியாக வழங்கப்பட்டன, இப்போது தேசிய கூட்டணி ஆட்சியில் எத்தனை குத்தகைகள் வழங்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடுமாறு லிம், தெங்கு சாப்ருலைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் தனது ஆட்சியில் வழங்கப்பட்ட 101 திட்டங்களின் பட்டியலை வெளியிடுமாறு தெங்கு சாப்ருலுக்கு சவால் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 26 அன்று 101 குத்தகைகளின் பட்டியல் நிதி அமைச்சால் வெளியிடப்பட்டது.

இந்தக் குத்தகைகள் குறித்து விசாரிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அம்னோ குழுவினர் புகார் அளித்திருந்தனர்.