Home One Line P2 “ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி

“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி

674
0
SHARE
Ad

நியூயார்க் – உலகம் எங்கிலும் முன்னணி குறுஞ்செயலியாக திகழ்ந்து வந்த டிக்டாக் அண்மையக் காலமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறது.

அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற அறிவிப்பு, இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு விட்டது என்ற நிலைமை, இவற்றுக்கிடையில் தடுமாறி நிற்கிறது டிக்டாக்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டிக்டாக் பாணியிலான புதிய குறுஞ்செயலி ஒன்றை யூடியூப் அறிமுகப்படுத்துகிறது. “ஷோர்ட்ஸ்” (Shorts) என இதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அடுத்த சில நாட்களில் முதன் முறையாக இந்தியாவில் அறிமுகமாகிறது ஷோர்ட்ஸ். டிக்டாக் இந்தியாவில் ஏற்கனவே மிகப் பிரபலமாக இருந்தது. சுமார் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. தற்போது இந்திய அரசாங்கத்தால் முற்றாகத் தடை செய்யப்பட்டு விட்டது.

அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் ஷோர்ட்ஸ் அறிமுகம் காணும். கூடுதலான தொழில்நுட்ப அம்சங்களையும் அந்த புதிய குறுஞ்செயலி கொண்டிருக்கும். பயனர்கள் தங்களின் திறன்பேசிகளின் வழி (smartphone) எடுக்கும் குறுகிய நேர, கவரும் விதமான காணொலிகளை ஷோர்ட்ஸ் வெளியிடத் தொடங்கும்.

எல்லா விதங்களிலும் டிக்டாக் போன்றே தொழில்நுட்ப அம்சங்களை இந்தப் புதிய குறுஞ்செயலி கொண்டிருக்கும்.

முதல் கட்டமாக இந்தியாவில் இந்தக் குறுஞ்செயலியைத் தொடங்குவதும் யூடியூப்பின் வணிக ரீதியான ஒரு வியூகம்தான். சில மாதங்களுக்கு முன்னர் சீனாவுடன் ஏற்பட்ட எல்லைத் தகராறுகள், மோதல்கள், உயிரிழப்புகளைத் தொடர்ந்து இந்தியா சீனாவின் டிக்டாக் செயலியைத் தடை செய்தது.

அதைத் தொடர்ந்து இந்தியப் பயனர்கள் அதற்கு மாற்றான ஒரு பொருத்தமான குறுஞ்செயலியைத் தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஷோர்ட்ஸ் அறிமுகம் காணுவது பொருத்தமான வணிக வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

யூடியூப் போன்றே இன்ஸ்டாகிராம் தளமும் ரீல்ஸ் என்ற டிக்டாக் பாணியிலான குறுஞ்செயலியை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இதற்கிடையில் ஓராக்கல், வால்மார்ட் இணைந்த கூட்டணி அமெரிக்காவின் டிக்டாக் வணிகத்தை வாங்கவிருக்கிறது. இந்த உடன்பாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். அந்த அறிவிப்புக்குப் பின்னரே யூடியூப் தனது புதிய ஷோர்ட்ஸ் குறுஞ்செயலியை அறிமுகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.