Home One Line P1 செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

செல்லியல் பார்வை : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

891
0
SHARE
Ad

(22 செப்டம்பர் 2020-ஆம் நாள் செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெற்ற  “சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?” என்னும்  காணொலியின் கட்டுரை படிவம்)

சபா மாநில முதல்வராக ஷாபி அப்டால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?

இதுதான் எங்கு திரும்பினாலும் இன்று மலேசியர்களிடையே பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம்.

சபா தேர்தலில் ஷாபி அப்டால் தலைமையிலான கூட்டணிக்கிருக்கும் சாதகமான அம்சங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சாதகம் # 1 : கூட்டணிக் கட்சிகளைப் பணிய வைத்த தலைமைத்துவ ஆற்றல்

#TamilSchoolmychoice

ஷாபியின் தலைமைத்துவ ஆற்றலுக்கு உதாரணமாக அவரது கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும், அவரையே முதலமைச்சராக அங்கீகரித்திருக்கின்றன.

இந்த ஒற்றுமை தேசிய முன்னணி- தேசியக் கூட்டணி இடையில் இல்லை.

சபா தேர்தலில் ஜசெக, அமானா இரண்டும் வாரிசான் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

பிகேஆர் கட்சி மட்டும் 7 தொகுதிகளில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது.

சபாவின் பூர்வீக இனங்களான கடாசான், டூசுன், மூருட் இனங்களைப் பிரதிநிதிக்கும் கட்சி உப்கோ. மாநிலக் கட்சியான உப்கோவின் மாநில உள்ளூர் ஆதரவைக் கருத்தில் கொண்டு அந்தக் கட்சியை அதன் சொந்த சின்னத்திலேயே போட்டியிட வைத்திருக்கிறார் ஷாபி.

இப்படியாக பிகேஆர், ஜசெக, உப்கோ, அமானா ஆகிய நான்கு கட்சிகளை தனது வாரிசான் கட்சியுடன் ஒருங்கிணைத்து வாரிசான் பிளஸ் எனும் 5 கட்சிக் கூட்டணியாக களமிறங்குகிறார் ஷாபி.

அனைத்துக் கட்சிகளும் அவரையே முதலமைச்சராக ஏற்றுக் கொண்டிருப்பது அவரது இன்னொரு சாதக பலம்!

சாதகம் # 2 : தனியாக ஆட்சி அமைக்கக் கூடிய பலம்

கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த அளவே தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் வாரிசான் சபா கட்சிக்கென 46 தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஷாபி அப்டால்.

மொத்தமுள்ள 73 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 37 தொகுதிகள் பெரும்பான்மை போதும்.

எனவே, தற்போதைய சாதகமான அரசியல் சூழ்நிலையினால் 37-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று விட்டால் ஷாபி அப்டால் தனியாகவே ஆட்சி அமைக்க முடியும்.

சபாவில் போட்டியிடும் கட்சிகளில் தனியாக, அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் ஒரே கட்சி ஷாபி அப்டாலின் வாரிசான் சபாதான்.

இதுவும் ஷாபி அப்டால் தேர்தலுக்கு முன்பே, தனது பலத்தைக் காட்டக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் வியூக ரீதியாக சாதக அம்சம்.

சாதகம் # 3 : சபா மக்களின் சொந்த மண்ணுக்கான எழுச்சி

சபா மாநிலத்தின் தன்னாட்சி உரிமை சபா மக்களுக்கே வேண்டும் என்னும் முழக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாகக் கேட்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக இளைஞர்களிடையே அந்த உரிமைக் குரல்கள் மேலும் உரத்து ஒலிக்கின்றன.

வெவோனா மொசிபின் எனும் 18 வயது மாணவி தனது கல்விக்காக, மரத்தின் கிளையில் ஏறி இணையத் தொடர்புக்காக 24 மணி நேரத்தை செலவிட்ட போராட்டக் கதை சபா மக்களின் மனங்களில் ஆழமாக ஊடுருவியிருக்கிறது.

சபா மக்களின் உரிமைகளை சபா மக்களே முடிவு செய்யட்டும் என்ற பிரச்சாரத்தின் விளைவுகளை அறுவடை செய்யப் போகும் அரசியல் சக்தியாக ஷாபி அப்டாலே பார்க்கப்படுகிறார். இதுவும் அவருக்கு இருக்கும் சாதகமான அம்சம்.

சாதகம் # 4: ஷாபியின் அரசியல் எதிரிகளின் கறை படிந்த பின்புலங்கள்

ஷாபி அப்டாலுக்கு எதிராக நிறுத்தப்படும் எல்லா முக்கிய முதலமைச்சர் வேட்பாளர்களும் ஏதோ ஒருவகையில் கறைபடிந்த கடந்த கால வரலாறுகளைக் கொண்டவர்கள். ஷாபிக்கு வாய்த்திருக்கும் இன்னொரு சாதகம் இது.

அவரது ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டவர் முன்னாள் முதல்வர் மூசா அமான். மொகிதின் யாசின் ஆட்சி அமைந்ததும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திடீரென மீட்டுக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மொகிதின் யாசின் அரசாங்கத்தின் மீதும் கறைகள், குறைகள் படிந்தன.

குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்ட அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் முதலமைச்சராக மூசா அமான் 33 சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சி மாற வைத்தார். ஷாபி அப்டாலின் ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டார்.

இதுவும் சபா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மூசா அமான் முன்னெடுத்த ஷாபி அப்டாலுக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு மேற்கு மலேசிய மத்திய அரசாங்கத்தின் தூண்டுதல் என்ற கருத்து சபாவில் நிலவுகிறது. இதுவும் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான வாக்குகளாக மாறும் அபாயம் நிலவுகிறது.

அடுத்து, சபா அம்னோ தலைவர் புங் மொக்தாரை தேசிய முன்னணித் தலைவராக அறிவித்தார் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி. இதுவும் சபா மக்களுக்கு அதிர்ச்சியையும் வெறுப்பையும் தந்தது.

காரணம் சர்ச்சைக்குரிய புங் மொக்தார் மீதும் ஊழல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

இதற்கிடையில் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என திடீர் அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மொகிதின் யாசின்.

அவரது நியமனத்தை அம்னோ, தேசிய முன்னணிக் கூட்டணிக் கட்சிகளே கூட ஆதரிக்க முன்வரவில்லை.

இப்படியாக ஷாபிக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் யாருமே மக்கள் அபிமானம் கொண்ட தலைவர்களாக இல்லை. கறை படிந்த பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்குள் மோதல்கள் நிகழ்கின்றன.

இதுவும்  ஷாபிக்கு இருக்கும் இன்னொரு சாதக அம்சம்.

சாதக அம்சம் # 5 : அம்னோ – பெர்சாத்து இடையிலான மோதல்

ஷாபி அப்டாலுக்கு வாய்த்திருக்கும் இன்னொரு சாதக அம்சம் அம்னோ-பெர்சாத்து இடையே எழுந்திருக்கும் மோதல்கள்.

17 தொகுதிகளில் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி இடையிலான கட்சிகளின் மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை பல்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றன.

பிகேஆர் போட்டியிடும் 7 தொகுதிகள், உப்கோ போட்டியிடும் 12 தொகுதிகள் தவிர்த்து 54 தொகுதிகளில் வாரிசான் சபா தனது சொந்த சின்னத்தில் போட்டியிடுகிறது.

ஷாபி அப்டாலை எதிர்க்கும் கட்சிகளுக்குள்ளேயே மோதல்கள் நிகழ்வதும், அவர்கள் வேறு வேறு சின்னங்களில் போட்டியிடுவதும் ஷாபிக்கு சாதகமாக அமையலாம்.

இத்தனை சாதகங்களைக் கொண்டுள்ள ஷாபி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?

காத்திருப்போம்!

-இரா.முத்தரசன்

“சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?” என்னும் இந்த செல்லியல் பார்வை கட்டுரையின் காணொலி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம் :