கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) 80 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 730 வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது. அத்துடன் மக்காவ் மோசடி கும்பலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் பணத்தையும் பறிமுதல் செய்தது.
மக்காவ் மோசடி தொடர்பான இயங்கலை மோசடி மற்றும் சூதாட்டக் கும்பல் அகற்றப்பட்டதன் விளைவாக 23 சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாகி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களில், பென்ட்லி, முஸ்டாங், லம்போர்கினி, போர்ஷே, பெராரி மற்றும் பல அடங்கு உள்ளன. பல சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களும் இதில் அடங்கும். இவை அனைத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் சொந்தமானவை என்று நம்பப்படுகிறது.
இது தவிர, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக நம்பப்படும் ஒரு கும்பலுக்கு எதிராக பாதுகாப்பு அளித்ததன் சந்தேகத்தின் பேரில் பல அமலாக்க அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“இதுவரை, எங்கள் விசாரணையில் 11 உள்ளூர்வாசிகளும் ஒரு சீன நாட்டவரும் எம்ஏசிசியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“அமலாக்கத் துறைகளைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் இதுவரை எட்டு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் மக்காவ் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கலாம், பாதுகாப்பு அளிக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்” என்று அவர் இன்று ஒரு வானொலி நேரடி நேர்காணலில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கும்பல் முந்தைய அமலாக்க நடவடிக்கைகள் இல்லாமல் சுதந்திரமாக தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால், எம்ஏசிசிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அசாம் கூறினார்.
மக்காவ் மோசடி நடவடிக்கைகள் இதற்கு முன்னர் ஊடகங்களில் பரவலாகப் புகாரளிக்கப்பட்டன மற்றும் மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புகளை உள்ளடக்கி உள்ளது.
முன்னதாக,நேற்று, இது போன்ற ஊழல் நடவடிக்கைகளில் சம்பந்தப்படும் அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, காவல் துறை எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.