Home One Line P1 சீனர்கள் அம்னோவுக்கு ஆதரவா? நம்பக்கூடிய வகையில் இல்லை!

சீனர்கள் அம்னோவுக்கு ஆதரவா? நம்பக்கூடிய வகையில் இல்லை!

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எமிர் ஆராய்ச்சி ஆய்வின் கண்டுபிடிப்புகளை பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார். சீனர்கள் அதிகமாக அம்னோவை ஆதரிக்கிறார்கள் எனும் அதன் ஆய்வின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.

மலேசிய சீனர்கள் அம்னோவை பெரிதளவில் ஆதரிப்பதாகவும், அவர்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே ஜசெகவை ஆதரிப்பதாக அது குறிப்பிட்டிருந்தது.

“இது ஒரு விசித்திரமான ஆராய்ச்சி கண்டுபிடிப்பு. சீனர்களும், இந்தியர்களும் நம்பிக்கைக் கூட்டணியுடன் சேர்ந்து ஜசெக மற்றும் பிகேஆரை ஆதரித்தார்கள்,” என்று இராமசாமி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் மாதத்தில் ஆய்வு நடத்திய எமிர், காலாண்டு ஆய்வில், மொகிதின் யாசின் பிரதமராக இருப்பதை வாக்காளர்கள் விரும்புவதாக அது கூறியது. ஆனால் அவரது கட்சியை 7 விழுக்காடு பேர் மட்டுமே ஆதரிக்கிறார்கள்.

சீனர்கள் 25 விழுக்காட்டுடன் அம்னோவுக்கு அதிக ஆதரவு தருவதாகவும், அதைத் தொடர்ந்து ஜசெக 17 விழுக்காட்டையும், மசீச 12 விழுக்காட்டையும் பெற்றிருப்பது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

“2,000 பதிலளித்தவர்களின் கணக்கெடுப்பின் முடிவுகள் மிகவும் விசித்திரமானவை, கற்பனை செய்யமுடியாதவை,” என்று அவர் கூறினார்.

இது, ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது, அதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் மற்றும் பதிலளித்தவர்கள் யார் என்பது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அம்னோ சமீபத்தில் சீனர்களால் நேசிக்கப்படுவதற்கும், சீனர்களால் நிராகரிக்கப்படுவதற்கு ஜசெக என்ன செய்தது?” என்று இராமசாமி கேள்வி எழுப்பினார்.

“அம்னோ இன்னும் ஜசெகவின் முதல் எதிரி, 2018- இல் நடந்த கடைசி பொதுத் தேர்தலில், ஜசெக மற்றும் அதன் கூட்டணிகள் அம்னோ மற்றும் தேசிய முன்னணியை தோற்கடிக்க கடுமையாக போராடினார்கள்.

“ஏராளமான சீனர்கள் ஆதரவு ஜசெகவுக்கு இருந்தது.”

ஜசெகவுக்கு சீனர்களின் ஆதரவு முன்பு இருந்ததைப் போலவே இருக்காது என்றாலும், நம்பிக்கைக் கூட்டணியுடன் உள்ள ஜசெகவா, தேசிய முன்னணியுடன் இருக்கும் அம்னோவா எனத் தேர்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், மலாய்க்காரர்கள் அல்லாத வாக்காளர்கள் தொடர்ந்து ஜசெகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.