கோலாலம்பூர்: பி40 பிரிவினர், மைக்ரோ மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி அவகாசம் தானியங்கி முறையில் அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
பி40 பிரிவினர் மற்றும் மைக்ரோ சிறு-நடுத்தர நிறுவனங்கள் இந்த ஆண்டு டிசம்பர் வரை செயல்படுத்தப்படும் மூன்று மாத கால கடன் தள்ளுபடிக்கு தகுதியான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை.
“பி40 வருமானக் குழுவினர் மற்றும் மைக்ரோ சிறு-நடுத்தர நிறுவனங்களின் விண்ணப்பங்களை வங்கிகள் 24 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஆவணங்களும் தேவையில்லை,” என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் கூறினார்.
வியாழக்கிழமை (நவம்பர் 26) நாடாளுமன்றத்தில் 2021 வரவு செலவு திட்டம் குறித்த தனது உரையின் போது தெங்கு ஜாப்ருல் இதனை தெரிவித்தார்.
எம்40 வருமானக் குழுவில் உள்ளவர்கள் அந்தந்த வங்கிகளில் ஆவணமில்லா அறிவிப்பை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அது ஒன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இரண்டாவது கடன் தள்ளுபடி கால நீட்டிப்பு கட்டத்திற்கு 700,000- க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் கட்டத்தில் பயனடைந்தவர்களில் 85 விழுக்காடினர் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அரசாங்கம் இது தொடர்பாக வங்கிகளில் தொடர்ந்து பேச்சு நடத்தும் என்று அவர் கூறினார்.