Home One Line P1 பெரும்பான்மை இல்லையென்றால் தலைவர் பதவியிலிருந்து அன்வார் விலகுவாரா?

பெரும்பான்மை இல்லையென்றால் தலைவர் பதவியிலிருந்து அன்வார் விலகுவாரா?

610
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் தான் தோல்வி கண்டால் நம்பிக்கை கூட்டணி தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அவர் இதனைத் தெரிவித்தார். இதனை நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனனர் என மலேசியாகினி இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் இதனை அன்வார் தெரிவித்ததாக பி கே ஆர், ஜசெக கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.  எனினும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

#TamilSchoolmychoice

அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில், அதற்குரிய பெரும்பான்மை எண்ணிக்கையைப் பெறுவதில் தோல்வியடைந்தால் அதன் பின்னர் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிடுவேன் என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தனது பிகேஆர் கட்சியின் வலிமையை அதிகரிக்கும் வண்ணம் கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்குவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஏற்றுக் கொள்ளப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்த சர்ச்சைகள்

கடந்த வியாழக்கிழமையன்று வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்ளும்படி அன்வார் சக நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வற்புறுத்தினார். இந்தக் கட்டத்தில் எண்ணிக்கை வாரியாக வாக்களிக்க முன்வந்தால் பிரதமருக்கு இருக்கும் ஆதரவு எவ்வளவு – தனது தலைமைக்கு இருக்கும் ஆதரவு எவ்வளவு – என்பது குறித்த உண்மை நிலவரங்கள் வெளிப்பட்டிருக்கும் என அன்வார்  தயங்கினார்.

தயக்கத்துடனும், விருப்பம் இன்றியும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரின் வற்புறுத்தலுக்குச் செவி சாய்த்தனர் – இணங்கினர். எனினும் பின்னர் அன்வாரை தங்களின் கேள்விகளால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் துளைத்து எடுத்தனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சமயத்தில் பதவி விலகும் உறுதிமொழியை அன்வார் வழங்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அன்வார் எழுதியது போன்ற பதவி விலகல் கடிதம் ஒன்று பகிரப்பட்டது. எனினும் பின்னர் அந்த கடிதம் பொய்யானது என அன்வார் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இருப்பினும் அந்த கடிதத்தில் உள்ள உள்ளடக்கங்கள் உண்மையானவை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த ஒரு வாரத்தில் தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதாக உறுதியளித்த அன்வார் இப்ராகிம் அவ்வாறு தன்னால் செய்ய முடியவில்லை என்றால் நம்பிக்கை கூட்டணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாகவும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் – இனி அடுத்த கட்டம் என்ன?

இனி அடுத்த கட்டமாக வரவு செலவு திட்டம் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு என்ற அளவில் செயற்குழுக் கட்ட விவாதங்களுக்கு விடப்படும்.

ஏன் வரவு செலவு திட்டத்தை நாங்கள் அனுமதித்தோம் என்பது குறித்தும் அன்வார் பகிரங்கமாக விளக்கமளித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக இந்தக் கட்டத்தில் நிராகரிப்பது மக்கள் மனதில் திருப்தியை ஏற்படுத்தாது எனவும் அன்வார் கருதியிருக்கிறார். காரணம், நிதி அமைச்சர் முன்மொழிந்த பல்வேறு திருத்தங்களில் பல நல்ல மக்கள் நல அம்சங்கள் இருந்தன. எனவே அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு கட்டத்தில் தாங்கள் விரும்புகின்ற திருத்தங்களை வரவு செலவு திட்டத்தில் மேலும் சேர்த்துக் கொள்ளலாம் என அன்வார் கருதினார்.

பெரும்பான்மை இழந்த மொகிதினுக்கு வழங்கப்படும் அங்கீகாரமா?

எனினும் வரவு செலவு திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பதால் பெரும்பான்மை இழந்திருக்கும் பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கத்திற்கு அன்வார் அங்கீகாரம் அளித்திருக்கிறார் எனக் கடுமையான சாடல்கள் எழுந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் இதே கருத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இனி தனது அரசியல் எதிர்காலத்தையே பணயம் வைத்து களத்தில் அன்வார் இப்ராகிம் குதித்திருப்பதால், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் பரபரப்பான அரசியல் கட்டத்திற்கு நாடு நகரக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

டிசம்பர் 17-ஆம் தேதி வரை வரவு செலவுத் திட்டத்திற்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படுகிறது.

அதற்குள்ளாக, மிக முக்கியமானதொரு முடிவை அன்வார் எடுக்க வேண்டியதிருக்கும். ஒன்று பகிரங்கமாக தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது மொகிதின் அரசாங்கம் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட – வாக்கெடுப்புக்கு விடப்பட – மக்களவைத் தலைவர் அசார் அசிசானிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

ஆனால் அசார் அசிசான் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்திற்கு விட தனக்கு அதிகாரமில்லை எனக் கூறி மறுத்து வருகிறார்.

அடுத்ததாக, இந்த அரசாங்கம் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபிக்கும் வண்ணம், தான் எப்போதும் தனக்கிருப்பதாகக் கூறி வரும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு வரவு செலவு திட்டத்தை அன்வார் தோற்கடிக்க வேண்டும்.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டதால் (கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர்) மிகக்  குறுகிய பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் மொகிதின் அரசாங்கம் ஓர் ஆதரவு வாக்கை இழந்திருக்கிறது. மற்றொரு அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்சா வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்திருக்கிறார்.

எனவே, இந்த வாய்ப்பை நழுவ விட்டால் அன்வாருக்கு இத்தகையதொரு இன்னொரு வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகமே!

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மொகிதின் அரசாங்கத்தை வீழ்த்த முடியவில்லையென்றால் – அன்வார் வாக்களித்தபடி நம்பிக்கைக் கூட்டணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவாரா?

-இரா.முத்தரசன்