Home One Line P1 பேராக்கில் எதிர்பாராத திருப்பம்: அம்னோ ஆட்சி அமைக்க நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு

பேராக்கில் எதிர்பாராத திருப்பம்: அம்னோ ஆட்சி அமைக்க நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு

868
0
SHARE
Ad

ஈப்போ: மலேசிய அரசியலில் இனி எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப பேராக் மாநில அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலையில் பேராக் சுல்தானைச் சந்தித்த அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி சுல்தானைச் சந்தித்த  பின்னர் “பேராக்கில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் அம்னோ புதிய கூட்டணியை உருவாக்கலாம்” எனக் கோடி காட்டியிருந்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் நோக்கில், பேராக் அரசாங்கத்தை அமைக்க முன்வந்திருக்கும் அம்னோவுடன் ஒத்துழைக்கவும் ஆதரவு தரவும் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பேராக் ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் இங்கா கோர் மிங் (படம்) “தங்களின் கட்சி பல இனம் சார்ந்த வலிமையான, நிலைத் தன்மை வாய்ந்த அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு வழங்கும்” என உறுதியளித்தார். கோர் மிங் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

மாநில சட்டமன்றத்தில் ஜனநாயக செயல் கட்சி 16 சட்டமன்றங்களைக்  கொண்டிருக்கிறது. நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற கட்சிகளான அமானா 5 சட்டமன்றத் தொகுதிகளையும் பிகேஆர் 3 தொகுதிகளையும் கொண்டிருக்கிறது.

3 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஸ், புதிய அரசாங்கத்தில் இடம் பெறப் போவதில்லை என அறிவித்து விட்டது. பெர்சாத்து கட்சி 5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

எனவே, 25 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே அம்னோ கொண்டிருப்பதால் ஆட்சி அமைக்க மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அந்தக் கட்சிக்குத் தேவைப்படுகிறது.

59 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பேராக்கில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதற்கிடையில் பி கே ஆர் கட்சியின் பேராக் மாநிலத் தலைவர் பார்ஹாஷ் வாஃபா சால்வாடோர் ரிசால் முபாராக், அம்னோ தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியிருப்பதாகவும், அடுத்த மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“மக்களுக்காக அம்னோவுடன் பணியாற்ற நாங்கள் தயார். முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான். ஆனால் நாங்கள் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளான ஜசெக, அமானாவுடன் இணைந்துதான் நாங்கள் ஒத்துழைப்போம்” எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இதேபோன்று அமானா கட்சியின் பேராக் மாநிலத் தலைவர் அஸ்முனி அவி அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றத் தயார் என கூறியிருக்கிறார். அம்னோவுடன் மட்டும் தனித்து நின்று நாங்கள் பணியாற்ற மாட்டோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சுல்தானைச் சந்தித்த சாஹிட் ஹாமிடி

பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சாஹிட், பேராக்கில் அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் அம்னோ புதிய கூட்டணியை உருவாக்கலாம் எனக் கோடி காட்டினார்.

புதிய மந்திரிபெசார் பதவிக்கான உத்தேச வேட்பாளர்களை சுல்தானிடம் சமர்ப்பித்திருப்பதாகவும் சுல்தான் மந்திரி பெசாரை முடிவு செய்வார் என்றும் சாஹிட் மேலும் கூறினார்.

எனவே, பெர்சாத்துவும், பாஸ் கட்சியும் அம்னோவுக்கு ஆதரவு தர முன்வராவிட்டால் எஞ்சியிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அம்னோ மாநில அரசாங்கத்தை அமைக்கும் என்பதை சாஹிட்டின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

எனினும் பழைய அமைப்பிலேயே – அதாவது தேசியக் கூட்டணி அடிப்படையிலேயே – அம்னோ தனது மந்திரி பெசாரைக் கொண்டு ஆட்சி அமைக்க விரும்புகிறது என சாஹிட் கூறினார். அப்படி இயலாத பட்சத்தில் புதிய கூட்டணியை உருவாக்கும் சாத்தியத்தையும் அவர் மறுக்கவில்லை.

பெரும்பான்மையை இழந்த அசுமு

பேராக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, நேற்று சனிக்கிழமை பிற்பகலில் தனது அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சுல்தானிடம் சமர்ப்பித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் முறையே தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர். பேராக் சுல்தான் சார்பாகப் பேசிய அரண்மனைக் காப்பாளர் சுல்தான் பதவி விலகும் அசுமுவுக்கும் அவரது ஆட்சிக் குழுவினருக்கும் அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக சுல்தான் நன்றி தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

சுல்தானுடன் சாஹிட் சந்திப்பு

இன்று காலை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க, சாஹிட் ஹாமிடி ஈப்போவில் உள்ள இஸ்தானா கிந்தா வந்தடைந்தார்.

நேற்று இரவு பேராக் அம்னோ சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. எனினும் அடுத்த மந்திரி பெசாராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்தும் யாரும் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.

பேராக் அம்னோ தலைவர் சரானி முகமட், முன்னாள் மந்திரி பெசார் சாம்ரி காதிர், ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் சாமான் ஆகிய மூவரும் அடுத்த மந்திரி பெசாராக நியமிக்கப்பட பரிசீலனையில் இருக்கின்றனர் என ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், பேராக் (பக்காத்தான் ஹரப்பான்) நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களையும், பேராக் அம்னோ தலைவர் சரானியையும் சுல்தான் தனித் தனியாக சந்தித்திருக்கிறார்.

அம்னோ அடுத்த ஆட்சியை அமைக்க முடியுமா?

அடுத்த மந்திரி பெசாராக அம்னோவைச் சேர்ந்தவர் வருவார் என்பது உறுதியாகியிருக்கிறது.

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அம்னோ அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அகமட் பைசால் தோல்வியுற்றார். அவருக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆதரவாக மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் வாக்களித்தனர்.