கிளந்தான், ஏப்ரல் 16- மலேசிய அரசியல் வரலாற்றில் தனி இடத்தை பிடித்திருக்கும் துங்கு ரசாலி ஹம்சா (படம்) கிளந்தான் மாநில குவாங் மூசாங் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
தேசிய முன்னணி – அம்னோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துங்கு ரசாலி ஹம்சா 76 வயதானவர். எனவே இந்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக வயதானவர் இவர் ஆவார்.
நீண்டகாலமாக இதே குவா மூசாங் தொகுதியில் போட்டியிட்டு வரும் துங்கு ரசாலி ஹம்சா இந்த பொதுத்தேர்தலும் இத்தொகுதியை தக்க வைத்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு முதல் முறையாக போட்டியிட்ட இவர், அதன் பின் பல முறை குவாங் மூசாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அம்னோவில் இல்லாத நேரத்திலும், செமங்காட் 46 கட்சியை தலைமையேற்று நடத்திய காலத்திலும் இவர் வெற்றி கண்டு வந்த தொகுதி குவா மூசாங் என்பதால் இந்த முறை மீண்டும் எளிதாக வெற்றி பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன.
துங்கு ரசாலியை இம்முறை பொதுத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அம்னோ பலவிதமான பிரச்சினை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற காரணத்தால் பிரதமர் அவரை வேட்பாளராக களம் இறக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.