Home One Line P2 டைம் பத்திரிக்கை தேர்வு : 2020-இன் உலகின் மாமனிதர்களாக ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்!

டைம் பத்திரிக்கை தேர்வு : 2020-இன் உலகின் மாமனிதர்களாக ஜோ பைடன் – கமலா ஹாரிஸ்!

664
0
SHARE
Ad

வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை 2020 ஆண்டுக்கான  உலகின் மாமனிதர்களாக புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணையதிபர் கமலா ஹாரிஸ் இருவரையும் தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை உலகின் சிறந்த சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து அந்தந்த ஆண்டின் சிறந்த மாமனிதர் என்ற கௌரவத்தை வழங்குவது வழக்கம்.

நிறைவடைந்து கொண்டிருக்கும் 2020 ஆண்டுக்கான உலகின் சிறந்த நபர்களாக  ஜோ பைடன் கமலா ஹாரிஸ் இருவரும் தேர்வு செய்யப் படுவதாக டைம் பத்திரிக்கை அறிவித்திருக்கிறபு.

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடித்து முறையே அதிபராகவும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற முறையில் ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதாக டைம் குறிப்பிட்டது.

பொதுவாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் தவணை அதிபராக இருந்தவரை இரண்டாவது தவணையில் தோற்கடிப்பது என்பது மிக அபூர்வமாகவே அமெரிக்க அரசியல்  வரலாற்றில் நடைபெறும்.

அந்த வரிசையில் ஒரே ஒரு தவணை மட்டும் பதவி வகித்த டிரம்பை தோற்கடித்ததன் மூலம் பைடன் சாதனை புரிந்துள்ளார். அதே போன்று அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபர், கருப்பின வம்சாவளியைச் சேர்ந்த – தெற்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த –  முதல் துணையதிபர் என பல்வேறு முனைகளில் சாதனை படைத்துள்ளார் கமலா ஹாரிஸ்.

இவ்வாறு உலகின் சிறந்த நபர்களை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை டைம் பத்திரிக்கை 1927 ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. முதலில் சிறந்த ஆண்மகன் என்று தேர்வை நடத்திய அந்த பத்திரிக்கை பின்னர் சிறந்த நபர் என்ற அளவில் ஆண்-பெண் இருபாலரையும் கடந்த ஆண்டுகளில் தேர்வு செய்திருக்கிறது.

சில ஆண்டுகளில் சில இயக்கங்களையும் டைம் பத்திரிகை உலகின் சிறந்த இயக்கமாக தேர்வு செய்திருக்கிறது.

சில ஆண்டுகளில் வித்தியாசமான தேர்வுகளையும் செய்திருக்கிறது. உதாரணமாக, 2006-ஆம் ஆண்டில், இணையத் தளத்தில் அதிகமான உள்ளடக்கங்களை வழங்கியவர்கள் என்ற முறையில் உலகின் பொதுமக்களை சிறந்த நபர்களாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டது.

1938ஆம் ஆண்டில் ஜெர்மனியின் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரை உலகின் மாமனிதராக பெயர் குறிப்பிட்டது டைம்.