கோலாலம்பூர் : கொவிட்-19 ஜனவரி 12-ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கவில்லை என்பதால் அது சட்டபூர்வமானது, அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டது என கோபால் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.
ஸ்ரீராம் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமாவார். நஜிப், ரோஸ்மாவுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அவர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து வழக்காடி வருகிறார்.
அதே வேளையில் மலேசியர்களின் அடிப்படை உரிமைகளை அவசரகாலச் சட்டம் மீறினாலோ, பாதித்தாலோ, அந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும் என்றும் ஸ்ரீராம் அறிவுறுத்தினார்.
மலேசிய அரசியலமைப்புச் சட்டம் 150 விதியின்படி முறையாக அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அந்த பிரகடனம் முறையானது, சட்டத்திற்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.