Home One Line P1 தம்பி விவகாரம் : ‘கெலிங்’ என்ற வார்த்தை மாற்றப்படும்- டிபிபி

தம்பி விவகாரம் : ‘கெலிங்’ என்ற வார்த்தை மாற்றப்படும்- டிபிபி

724
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய சமூகத்தை அவமதிப்பதாகக் கூறப்படும் ‘கெலிங்’ என்ற வார்த்தையை ‘தம்பி‘ என்ற வார்த்தைக்கான அகராதியில் குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்படும் என டேவான் பகாசா டான் புஸ்தகா (டிபிபி) தெரிவித்துள்ளது.

டிபிபி இயக்குனர் அபாங் சல்லேஹுடின் ஏபி ஷோகரன் கூறுகையில், தற்போது பயன்படுத்தப்படும் ‘கெலிங்’ என்ற வார்த்தை ‘ஓராங் இந்தியா’ என்ற வார்த்தையுடன் மாற்றப்படும் என்று கூறினார்.

“இயங்கலை அகராதியில் புதுப்பிக்கப்படும். வாக்கியத்தில் உள்ள ‘கெலிங்’ என்ற சொல் சமீபத்திய டிபிபி அகராதிகளைப் போலவே ‘ஓராங் இந்தியா’ என்ற வார்த்தையுடன் மாற்றப்படும். நாங்கள் இயங்கலை அகராதியையும் புதுப்பிப்போம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, தம்பி என்றால் “நம்மை விட இளையவர்களை கெலிங் மக்கள் இப்படித்தான் கூப்பிடுவர்” என்ற விளக்கத்தை டேவான் பகாசா வழங்கியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தம்பி என்ற சொல்லுக்கு இரண்டாவது விளக்கமாக, ஓர் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக இருப்பவனை அதாவது பியூனை இப்படித்தான் அழைப்பார்கள் என்ற மற்றொரு விளக்கத்தையும் டேவான் பகாசா வழங்கியிருந்தது.

இதுவும் தவறான விளக்கமாகும். காரணம் தமிழில் தம்பி என்பது இளைய சகோதரனைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். மற்ற இனத்தவர்கள் தம்பி என்று இளையவர்களை அழைப்பது மரியாதையான சொற்பிரயோகம்தான். என்றாலும் தம்பி என்ற சொல்லே ஆபீஸ் பியூனைத்தான் குறிக்கும் என்ற நோக்கில் டேவான் பகாசா விளக்கமளித்திருக்கிறது.

மேலும் தம்பி என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க முற்படும்போது “கெலிங்” என்ற தரக் குறைவான சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்திய சமூகத்தில் இவ்வாறு அழைப்பார்கள் என்று கூறியிருக்கலாம். அதை விடுத்து ஏன் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் “கெலிங்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற கண்டனமும் எழுந்தது.

பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி உட்பட மஇகா செனட்டர் வேள்பாரி ஆகியோர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.