Home கலை உலகம் திரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

திரைவிமர்சனம் : “கர்ணன்” – விளிம்பு நிலை சமூகப் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

1122
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 9 முதல் மலேசியா உள்ளிட்ட, திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது “கர்ணன்”.

பரியேறும் பெருமாள் என்ற படத்தை எடுத்து வசூல் ரீதியான வெற்றியோடு,  தரமான படைப்பாகவும் வழங்கிய இயக்குநர் மாரி செல்வராஜூவின் இரண்டாவது படம் “கர்ணன்”.

கலைப்புலி தாணுவின் பிரம்மாண்ட தயாரிப்பு, நடிகர் தனுஷ் கதாநாயகன் – என்ற மேலும் இரண்டு சிறப்பு அம்சங்களும் சேர்ந்தாலும், “பரியேறும் பெருமாள்” அளவுக்கு “கர்ணன்” நம்மைக் கவரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

#TamilSchoolmychoice

முதல் படத்தில் ஒரு விளிம்பு நிலை சமூகத்தின் வலிகளை அழுத்தமாகப் பதிவு செய்த மாரி செல்வராஜ் அந்த சமூகத்தில் வளர்க்கப்பட்ட நாய் முதல் மனிதர்கள் வரை எப்படி மற்ற சமூகங்களின் ஆதிக்கத்தால் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதை பார்க்கும் இரசிகர்களின் மனங்கள் பதைபதைக்க எடுத்துக் கூறினார்.

இந்த முறையும் அதே போன்றதொரு சமூகத்தின் வலியை, அவலத்தை, அவர்களின் உரத்த குரலைப் பதிவு செய்திருக்கிறார்.

அந்த சமூகத்தின் இன்னொரு கோணத்திலான போராட்டத்தையும், ஓர் ஊரே ஒன்று திரண்டு வன்முறையோடு போராடும் ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு திரைக்கதையை செதுக்கியிருக்கிறார்.

ஏற்கனவே, தமிழ் நாட்டில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படக் கதை அமைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படும் ஊரின் பெயர் “பொடியன் குளம்”. 1990ஆம் ஆண்டுகளில் “கொடியன்குளம்” என்ற ஊரில் நடந்த காவல் துறை அராஜங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இதே போன்ற மற்றொரு சாதியக் கொடுமைகள் நிகழ்ந்த ஊர் மாஞ்சோலை. இந்த ஊர்களின் உண்மைச் சம்பவங்களை வைத்து “கர்ணன்” கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தின் சிறப்பம்சங்கள்

படத்தின் ஒளிப்பதிவு நம்மைக் கவரும் முதல் அம்சம். “மேற்குத் தொடர்ச்சி மலை” இயக்கி அனைவரையும் ஈர்த்த தேனி ஈஸ்வரின் கேமரா, ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் சுற்றி வந்திருக்கிறது. அந்த ஊரின் பலவிதமான விலங்குகளின் நகர்வுகளையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பாக படம் முழுவதும் காட்டப்படும் முன்னிரு கால்கள் கட்டப்பட்ட குட்டிக் கழுதை படும் அவஸ்தையைக் கண்டு நமக்கும் மனம் வலிக்கிறது.

வீட்டுப் பூனை, ஊரில் சுற்றி வரும் தெருநாய்கள், குட்டிகளோடு உலா வரும் பன்றிகள், படபடக்கும் ஒரு பட்டாம்பூச்சி, கோழிக் குஞ்சைக் கொத்திச் செல்லும் பருந்து, சிறகடிக்கும் பறவைகள், சிறுவனால் வளர்க்கப்படும் குதிரை, என பல்வேறு மிருகங்களின் காட்சிகளையும் பொருத்தமான இடங்களில் புகுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநரும், அதைப் படமாக்கியிருக்கும் விதத்தில் ஒளிப்பதிவாளரும் பாராட்டுக்குரியவர்கள்.

நடிப்பு என்று வரும்போது அனைவருமே அந்தந்தக் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இயல்பான நடிப்பு. தனுஷ், யோகிபாபு, நட்டி, லால் தவிர மற்ற அனைவருமே பெரும்பாலும் துணை நடிகர்கள்தான். பல காட்சிகளில் படம் எடுக்கப்பட்ட ஊரிலுள்ள மக்களே நடித்திருக்கிறார்கள்.

தனுஷூக்கு அசுரன் படம் அளவுக்கு நடிப்புக்கான விரிவான களம் இல்லை. எனினும், துடிப்புள்ள இளைஞராக, அநீதிகளுக்கு எதிராக வன்முறையைக் கையெலெடுக்கும் போராளியாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வழக்கமாக வில்லனாக வரும் லால், இந்தப் படத்தில் தனுஷூடன் எப்போதும் ஊர்சுற்றும் பெரியவராக மறக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இசையமைப்பு பெரும்பலம்

படத்திற்கான பெரும்பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. தாரை, தப்பட்டைகளுடன் பின்னணி இசைக் கோர்வையில் அதிரடி கிளப்பியிருக்கிறார்.

ஏற்கனவே, பட்டி தொட்டிகளிலும், சமூக ஊடகங்களிலும் பிரபலமாகியிருக்கிறது  “அவனைக் கண்டா வரச் சொல்லுங்க” என்ற பாட்டு. படத்தின் தொடக்கத்திலேயே இடம் பெற்று படத்தின் டெம்போவை, வெப்பத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

படத்தின் பலவீனங்கள்

ஒரு திரைப்படம் என்ற முறையில் பார்க்கும்போது படம் சுமார் ரகத்திலேயே சேர்கிறது. ஊர்மக்களின் காட்சிகளில் பல ஏதோ ஒரு கிராமத்தின் ஆவணப் படம் போல் காட்டப்படுகின்றன.

பொதுவாக கொடியன்குளம் காவல் துறை அராஜகத்தை ஆவணப்படமாக எடுத்துக் காட்டியிருப்பது போல் தோன்றுகிறது. “பரியேறும் பெருமாள்” படம் போன்று புதிய கோணத்திலான அணுகுமுறையோ, கதாபாத்திரங்களோ இந்தப் படத்தில் இல்லை.

பரியேறும் பெருமாள் படத்தில் இரண்டு சமூகங்களையும் ஒரே மேசையில் அமர்ந்து பேச வைத்த – இருதரப்பு பிரச்சனைகளையும் சமன்படுத்திக் காட்டிய – மாரி செல்வராஜ் இதில், ஒரு சார்பு பிரச்சனையை மட்டும் முன்வைத்திருக்கிறார்,

ஒருவேளை உண்மையில் நடந்தவற்றை அசலாக, இரத்தமும் சதையுமாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் மாரி செல்வராஜ் அவ்வாறு எடுத்திருக்கலாம்.

அதே போல இரண்டு ஊர்களுக்கு இடையிலான சண்டை என்பது ஏற்கனவே பல படங்களில் வந்த சம்பவங்கள்தான். காவல் துறை அராஜகம்கூட பல படங்களில் விலாவாரியாகக் காட்டப்பட்டு விட்டது.

படத்தின் உச்ச கட்ட காட்சிகளும், திருப்பங்களும், இறுதி முடிவும் இப்படித்தான் இருக்கும் என நம்மால் ஊகிக்க முடிவதும் படத்தின் பலவீனம்.

இடையிடையே காட்டப்படும் பொம்மை முகங்களுடன் கூடிய இறந்து போனவர்களின் காட்சிகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் என்பதும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன.

ஒரு சமூகத்தின் அவலத்தை, வலியை அதிகமாக எடுத்துக்காட்டுவதிலேயே இயக்குநர் முனைப்பு காட்டியிருக்கிறார். அதனால் திரைப்படம் என்ற தளத்தில் படம் சற்றே சறுக்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

எனினும், வழக்கமாக பாடல், நடனம் சண்டைக் காட்சிகள் என ஏற்கனவே அரைக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்குள் நுழையாமல், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இயக்குநர், ஓர் ஊரின் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, அவர்களின் வாழ்க்கையையும், வலிகளையும் அழுத்தமாகப் பதிவு செய்த விதத்தில் கர்ணன் தனித்து, உயர்ந்து நிற்கிறான்.

இயக்குநரும் நிமிர்ந்து நிற்கிறார்!

-இரா.முத்தரசன்