Home நாடு “தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – விக்னேஸ்வரன் ஆசிரியர் தின செய்தி

“தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – விக்னேஸ்வரன் ஆசிரியர் தின செய்தி

1106
0
SHARE
Ad

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

 எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் என்பவருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் நமது மூதாதையர்கள் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என சொல்லி வைத்தார்கள்.

பெற்ற தாய், பாதுகாத்து வளர்த்த தந்தை, இவர்களுக்கு அடுத்த நிலையில் குரு எனப்படும் ஆசிரியரைப் போற்றி வாழ்வது நமது சமூகம். அதைவிட முக்கியமாக தாய், தந்தை, ஆசிரியர் என்ற மூவருக்குப் பின்னர்தான் தெய்வத்துக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாணவனின் கல்விப் பயணத்திலும், உயர்ந்த நிலையை அடைந்த பிரபலமானவர்களின் வளர்ச்சிப் பாதையிலும், எந்த ஒரு சாதாரண தனிமனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும் அவர்களை ஏதாவது ஒரு காலகட்டத்தில் திசை திருப்பி நல்வழிப்படுத்திய ஆசிரியர் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.

#TamilSchoolmychoice

அந்த ஆசிரியரின் வழிகாட்டுதலை அந்த மனிதர்கள் தங்களின் இறுதிக் காலம் வரை நினைவில் வைத்துப் போற்றுவார்கள்.

பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பிப்பதை நமது நாட்டில் ஊதியம் பெறும் பணியாகக் கொண்டிருந்தாலும், அதையும் மீறி அவர்கள் கால நேரம் பார்க்காமல் வழங்கும் உழைப்பையும், சேவைகளையும் நாம் மறந்து விட முடியாது. பல ஆசிரியர்கள் இலவசமாக தங்களின் மாணவர்களின் கல்வித் திறனை வளர்க்கப் பாடுபடுகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

இனம், மதம் பார்க்காமல், ஒருவனைத் தனது மாணவனாக மட்டுமே பார்க்கும் பரந்த குணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள். அதே போல, அந்த மாணவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும்போது அதற்காக அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கும் அளவிருக்காது.

இப்படியாக பல சிறப்புகளைக் கொண்ட ஆசிரியர்களைப் போற்றும் விதமாக இன்று மே 16-ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாட்டின் கல்வி முறையும் அமைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வண்ணம் துன் அப்துல் ரசாக் தலைமையில் தயாரிக்கப்பட்டது “ரசாக் அறிக்கை”. நாட்டின் முதல் கல்வி அமைச்சரும், இரண்டாவது பிரதமருமான துன் அப்துல் ரசாக் தலைமையில் சுதந்திரத்துக்கு ஓராண்டுக்கு முன்னர், 1956-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை அப்போதைய மலாயா கூட்டரசு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மே 16-ஆம் நாள்தான் பின்னர் நமது நாட்டின் ஆசிரியர் தினமாக இன்றுவரைக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்று நமது நாட்டின் கல்வி அமைப்பு சிறப்பாகச் செயல்படுவதற்கும், கல்வி அறிவைக் கொண்ட மக்களையும், அனைத்துத் துறைகளிலும் சிறந்த நிபுணர்கள்,  திறமையாளர்கள் அடங்கிய அறிவார்ந்த சமூகத்தினரை நமது நாடு பெற்றிருப்பதற்கும் அடிப்படையில் ஆசிரியர்கள் வழங்கிய தன்னலமற்ற சேவைகளும், தியாகங்களும்தான் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.

வாழ்க ஆசிரியர் பெருமக்கள்! தொடரட்டும் அவர்களின் நற்பணிகளும், சேவைகளும்!