Home நாடு ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமனமா? மொகிதின் பதவி விலகுகிறாரா?

ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமனமா? மொகிதின் பதவி விலகுகிறாரா?

1374
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னர் வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் வழக்கம்போல் பல அரசியல் ஆரூடங்கள் அதிர்ச்சி தரும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றன.

ஆகக் கடைசியாக வந்திருக்கும் தகவல் – அம்னோவின் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஒன் விரைவில் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது. இதன் மூலம் அம்னோவின் ஆதரவை பிரதமர் மொகிதின் யாசின் தொடர்ந்து பெறக் கூடிய சாத்தியம் ஏற்படும்.

அடுத்த கட்டமாக, பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகிக் கொண்டு ஹிஷாமுடின் பிரதமராகப் பதவியேற்பது. ஹிஷாமுடின் தனக்கு துணைப் பிரதமராக அஸ்மின் அலியை நியமிப்பார் என்பது புறப்பட்டிருக்கும் இந்தப் புதிய ஆரூடத்தின் தொடர்ச்சி!

வைப்ஸ் இணைய ஊடகம் வெளியிடும் ஆரூடம்

#TamilSchoolmychoice

மேற்கண்ட இந்த ஆரூடங்கள் வைப்ஸ் (Vibe) என்ற இணையத் தள ஊடகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தப் புதிய அரசியல் மாற்று ஆலோசனைத் திட்டத்தை ஆதரிப்பதற்காக அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரப்பட்டு வருகிறது. இது தொடர்பான சந்திப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், மாமன்னர் இந்த மாற்றத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.

அம்னோ கட்சியில் எந்த முக்கியப் பதவியிலும் இல்லாதவர் ஹிஷாமுடின். அவர் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினராகக் கூட இல்லை. இருப்பினும் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

ஒரு மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவர் ஹிஷாமுடின். அவரது தாத்தா ஓன் ஜபார் அம்னோவை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். அம்னோ கட்சியின் முதல் தலைவர். ஹிஷாமுடினின் தந்தையார் ஹூசேன் ஓன் அம்னோவின் துணைப் பிரதமராக இருந்து பின்னர் 3-வது பிரதமராகப் பதவி வகித்தவர்.

முன்னாள் பிரதமர் நஜிப்பின் தாயாரும், ஹிஷாமுடின் தாயாரும் சகோதரிகள். இப்படிப் பல கோணங்களில் அம்னோ பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவர் ஹிஷாமுடின்.

ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தந்தையாரும் தாயாரும்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றாலும், வைப்ஸ் வெளியிட்டிருக்கும் ஆரூடங்கள் நம்ப முடியாததாக இருக்கிறது. அம்னோவின் நஜிப் துன் ரசாக், சாஹிட் ஹாமிடி இருவரும்தான் இன்னும் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களின் கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஆதரவு தெரிவித்தால்தான் ஹிஷாமுடின் துணைப் பிரதமராகவோ, அடுத்த பிரதமராகவோ ஆகும் திட்டம் என்பது செயல்படுத்தப்பட முடியும்.

அப்படியே ஹிஷாமுடினை அம்னோவினர் துணைப் பிரதமராகவோ, அடுத்த பிரதமராகவோ ஏற்றுக் கொண்டாலும், அஸ்மின் அலி துணைப் பிரதமராவதை அம்னோவினர் ஏற்றுக் கொள்வார்களா? ஆதரிப்பார்களா? என்பது கேள்விக் குறியே!

அஸ்மின் அலி 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். 2018-இல் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அஸ்மின் அலியின் அந்த 11 நாடாளுமன்றக் குழுவினர் பெரிதும் உதவினார்கள்.

ஆனால் இப்போதைய அரசியல் நிலைமை வேறு! அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சியே அம்னோவுடன் ஒத்துழைக்க முன்வந்திருக்கிறது. எனவே, அஸ்மின் அலியுடன் இணைவதை விட அன்வாருடன் இணைவதே அம்னோவுக்கு பெரும்பலமாகவும், எதிர்காலத்தில் 15-வது பொதுத் தேர்தலில் வெற்றியடைவதற்கு உறுதுணையாகவும் இருக்கும்.

ஆரூடங்களை மறுக்கும் ஹிஷாமுடின்

வைப்ஸ் இணைய ஊடகத்தில் வெளியாகியிருக்கும் ஆரூடங்களை மறுத்திருக்கிறார் ஹிஷாமுடின். “அவை வெறும் வதந்திகள். வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என ஹிஷாமுடின் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் உள்துறை அமைச்சர் மற்றொரு தகவலை பூடகமாக வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, பிரதமராக விரும்புபவர்கள் இன்னும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியதுதானே, அதற்குள்ளாக தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டு விடும் என்று கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சரான ஹம்சா சைனுடின்.

ஆக, மாமன்னர் புதிய அரசாங்கத்தைத் தோற்றுவிப்பதற்கு பதிலாக பொதுத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதை நடத்துவதற்கான காலகட்டத்தை நிர்ணயிக்கத்தான் கட்சிகளுக்கிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அப்படியே புதிய கூட்டணி கட்சிகளுடன் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஒரு கட்சி (தற்போது அம்னோ செய்வதைப் போல்) கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டால் மீண்டும் இப்போது எழுந்துள்ளதைப் போன்றே அரசியல் சிக்கல் ஏற்படும்.

எனவே, 80 விழுக்காட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு அதன் பின்னரே பொதுத் தேர்தலே நடத்தப்படும். அதுவே, தற்போதுள்ள அரசியல் சிக்கல்களுக்கும், போராட்டங்களுக்கும் உரிய தீர்வாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

-இரா.முத்தரசன்