கோலாலம்பூர்: அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான ஆதரவைப் பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சத்தியப் பிரமாணங்கள் சேகரிக்க முயற்சிகள் நடந்ததாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் ஒப்புக் கொண்டார்.
மலேசியா போஸ்ட் செய்தித் தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பேட்டியில் பேசிய மஸ்லான், சத்தியப் பிரமாணம் கையெழுத்திட எந்தவொரு நபரும் தன்னை அணுகவில்லை என்று கூறினார்.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் குறித்தும் அவர் விரிவாகக் கூறவில்லை.
“சத்தியப் பிரமாணம் பற்றி நான் கேள்விப்பட்டேன், நான் மறுக்கவில்லை. இதுபோன்ற முயற்சிகள் உண்மையில் மேற்கொள்ளப்படுகின்றன, இருப்பினும் தனிப்பட்ட முறையில் நானும் வேறு சில நண்பர்களும் எதையும் கையெழுத்திட அணுகவில்லை,” என்று அவர் கூறினார்.
தேசிய கூட்டணியில் இருந்து அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஆதரவைப் பெற சத்தியப் பிரமாணம் சேகரிக்க சில கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கேட்டபோது அகமட் இவ்வாறு கூறினார்.