Home நாடு “முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” – சாஹிட்டுக்கு...

“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” – சாஹிட்டுக்கு விக்னேஸ்வரன் கோரிக்கை

729
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து சாஹிட் முதலில் தனது கட்சியான அம்னோவின் அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்ல வேண்டுமே தவிர மாறாக, பிரதமரை பதவி விலகச் சொல்வது முறையல்ல என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோவை விலக்கிக் கொள்ளும் முடிவும் அதைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தமும்  வெற்றியடையாது. காரணம் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள தேசிய முன்னணி அமைச்சர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகுவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை” என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கருத்துரைத்தார்.

#TamilSchoolmychoice

“அம்னோ உச்சமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளாத, பின்பற்றாத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முதலில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் சாஹிட் எடுக்கும் முடிவுகள் தெளிவற்றவையாகவும், இலக்குகள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

“ஒரு முதிர்ச்சியடைந்த கட்சி என்ற முறையில் அம்னோவுக்கும் இந்நேரம் ஒன்று புரிந்திருக்கும். கடந்த காலங்களில் பல முறை ஆட்சி செய்தபோது அம்னோவின் பிரதமரை பதவி விலகச்சொல்லி எதிர்க்கட்சிகள் பல முறை வலியுறுத்தியிருக்கின்றன. ஆனால் அம்னோ பிரதமர் யாரும் அவ்வாறு பதவி விலகியதில்லை. காரணம் அவர்களுக்குத் தெரியும் இது வெறும் அழுத்தம்தான் என்பது” என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

நேற்று புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்றும், தேசியக் கூட்டணியில் இருந்து அம்னோ வெளியேறுவதாகவும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தேசியக் கூட்டணி அரசாங்கம் நாட்டை ஆள்வதில் தோல்வி கண்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் சாஹிட் கூறியிருந்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி அம்னோ உச்சமன்றம் நிர்ணயித்த 7 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய மொகிதின் யாசின் அரசாங்கம் தவறி விட்டதால் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாக சாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார்.

மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகி இடைக்காலப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வழிவிட வேண்டும் என்றும் சாஹிட் கேட்டுக் கொண்டுள்ளார்.