Home நாடு ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசிய இணையர் – இரட்டையர் ஆட்டம் முதல் சுற்றில் வெற்றி

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசிய இணையர் – இரட்டையர் ஆட்டம் முதல் சுற்றில் வெற்றி

659
0
SHARE
Ad

தோக்கியோ : மலேசியா இந்த முறை ஒலிம்பிக்ஸ் தங்கம் வெல்ல இலக்கு கொண்டிருக்கும் விளையாட்டுகளில் முதன்மையானது பூப்பந்து போட்டிகளாகும்.

உலக அரங்கில் மலேசியா விளையாட்டாளர்கள் முத்திரை பதித்திருந்தாலும், ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் இலக்கு இதுவரை மலேசியப் பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு வாய்க்கவில்லை.

இந்நிலையில் பூப்பந்து இரட்டையர் போட்டிகளில் நாட்டின் முதன்மை நிலையைக் கொண்டிருக்கும் இணையர்களான (ஜோடி) ஆரோன் சியா – சோ வூய் யீக் இருவரும் தங்களின் முதல் சுற்று ஆட்டத்தில் நேற்று (சனிக்கிழமை ஜூலை 24) வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

தென் கொரியாவின் ஆட்டக்காரர்களுக்கு எதிரான போட்டியில் இரண்டு ஆட்டங்களிலும் 24-22, 21-15 புள்ளிகளில் மலேசிய இணையர் 43 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றனர்.

உலகத் தர வரிசையில் தற்போது ஆரோன் சியா – சோ வூய் யீக் இணையர் 9-வது இடத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தோற்கடித்த தென்கொரிய இணையர் உலகின் தர வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனிசியாவுடன் மலேசிய இணையர் விளையாடுவர். அடுத்து மூன்றாவது ஆட்டத்தில் அவர்கள் கனடாவின் ஆட்டக்காரர்களைச் சந்திப்பர்.

ஆரோன் சியா – சோ வூய் யீக் இணையர் 2019 அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.