கோலாலம்பூர் : அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றும் பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகிய மூவரும் கூட்டாகக் கையெழுத்திட்டிருக்கும் அறிக்கையின் மூலம் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.
பொதுத் தேர்தல் நடத்தப்படுவதை பக்காத்தான் கூட்டணியும் ஆதரிக்கவில்லை என அந்த அறிக்கை தெரிவித்தது.
மொகிதினை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முன்வருமாறும் பக்காத்தான் கூட்டணி அறிக்கை கேட்டுக் கொண்டது.
நாடாளுமன்றத்தில் பக்கத்தான் கூட்டணியின் பலம் தற்போது 88 ஆகும். பெரும்பான்மையைப் பெற 110-க்கும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பக்காத்தான் கூட்டணி இதனை அடைவதற்கும், அன்வார் பிரதமர் ஆவதற்கும் மற்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.