கோலாலம்பூர் : தற்போது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நடப்புகள் இந்திய சமுதாயத்திற்கு ஒரு பாடம் எனக் குறிப்பிட்டிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மலாய் அரசியல் கட்சிகளைப் போன்று, சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து கிடக்கும் இந்தியர் அரசியல் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்திருக்கிறார்.
பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் மனித வள அமைச்சராகவும் பணியாற்றியவர் சரவணன்.
“மலாய் கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், மிகப் பெரிய கட்சிகளாகத் திகழ்ந்தாலும் அவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. காரணம் மலாய் சமூகத்தின் நலன்களுக்காக அவை அவ்வாறு செய்கின்றன” எனச் சுட்டிக் காட்டிய சரவணன் நாமும் அது போன்று ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
நேற்று மாமன்னர், இஸ்மாயில் சாப்ரியை ஆதரிக்கும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரண்மனைக்கு அழைத்து அவர்களின் ஆதரவை மறு உறுதிப்படுத்தினார்.
அந்த 114 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக அரண்மனை சென்ற சரவணன் மாமன்னருடனான சந்திப்பு குறித்தும், நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும், “வணக்கம் மலேசியா” இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாம் ஒன்றிணையாவிட்டால், தேசிய நீரோட்ட அரசியலில் நாம் காணாமல் போய்விடுவோம்” என்றும் சரவணன் எச்சரித்தார்.
இன்னும் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் கூறிய சரவணன், “அம்னோ தன்னைப் பிரதமர் பதவியில் இருந்து கவிழ்த்தது என்றாலும் அதே அம்னோவிலிருந்து ஒருவர் அடுத்த பிரதமராகத் தேர்வு பெற மொகிதின் யாசின் ஆதரவு தெரிவித்திருக்கிறார். தங்களின் சொந்த நலன்களை விட மலாய் சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால்தான் மொகிதின் யாசின் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது. இதிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மஇகா-அம்னோ இடையிலான உறவு கணவன் மனைவி உறவு போன்றது
அம்னோ-மசீச-மஇகா இடையிலான கூட்டணி வரலாற்றுக் கூட்டணி என வர்ணித்த சரவணன் “எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரிய மாட்டோம். நாங்கள் பிரிவோம் என்று நினைக்க வேண்டாம்.
எங்களுக்கிடையிலான உறவு கணவன்-மனைவி உறவு போன்றது. நாங்கள் பிரிந்து விட்டால் எங்களுக்குப் பதிலாக உள்ளே நுழைந்து கொள்ளலாம் என யாரும் கனவு காண வேண்டாம்” என்றும் கூறினார்.
“நானும் விக்னேஸ்வரனும் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தெளிவாக இருக்கிறோம். வெளியில் இருக்கும் கட்சிகளோடு இணையவும் எங்களுக்கு இருக்கும் 9 நாடாளுமன்றத் தொகுதிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென ஒதுக்கப்படும் ஒரு தொகுதியில் எங்களை விட இன்னொரு கட்சி – உதாரணமாக ஐபிஎப் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அந்தத் தொகுதியில் அதிக பலத்துடன் இருக்கிறார்கள், அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறார்கள். எங்களை விட அதிகமான வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது என்றால் அது குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். ஆனால், எங்களை ஒதுக்கி விட்டு, எங்களை வீழ்த்தி விட்டு அம்னோதான் எங்களுக்கு வேண்டும் என எங்களைத் தாண்டி மற்ற இந்தியர் கட்சிகள் செல்ல நினைத்தால் அதில் அவர்கள் வெற்றி பெற முடியாது” எனவும் சரவணன் வலியுறுத்தினார்.
“தேசிய முன்னணி கூட்டணியில் எந்தக் கட்சியை இணைக்கலாம் என்பதை நிர்ணயிக்க வேண்டிய இடத்தில் மஇகாதான் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். எனவே, வாருங்கள் இந்தியர் கட்சிகள், அனைவரும் இணைந்து ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்படுவோம்” என சரவணன் அறைகூவல் விடுத்தார்.