Home நாடு மலாக்கா சட்டமன்றத் தேர்தல் : பக்காத்தான் வழக்கால் தடுத்து நிறுத்தப்படுமா?

மலாக்கா சட்டமன்றத் தேர்தல் : பக்காத்தான் வழக்கால் தடுத்து நிறுத்தப்படுமா?

538
0
SHARE
Ad

மலாக்கா : மலாக்கா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இருந்தாலும் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவு சட்டவிரோதமானது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பக்காத்தான் ஹாரப்பான்.

மலேசிய அரசியல் சாசனத்திற்கு (Malaysian Constitution) எதிரான இந்த முடிவு குறித்து கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் இந்த வாரத்தில் அந்த வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பக்காத்தான் அறிவித்திருக்கிறது.

பொதுவாக மலேசியாவில் நீதிமன்ற வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இருந்துதான் தொடங்கும். ஆனால் ஒரு வழக்கு, மலேசிய அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்றாலோ, மலேசிய அரசியல் சாசனத்தின் சட்டவிதிகளின் முரண்பாடுகள் குறித்த வழக்கு என்றாலோ அந்த வழக்கை நேரடியாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் தொடுக்க முடியும்.

#TamilSchoolmychoice

அதன்படி நம்பிக்கைக் கூட்டணி இந்த வழக்கைத் தொடுத்தால் கூட்டரசு நீதிமன்றம் உடனடியாக வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும்.

வழக்கிற்கான காரணம் என்ன?

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது முறையானதல்ல, சட்டவிரோதமானது என நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

மலாக்கா மாநிலத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் மாநில அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மலாக்காவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி  ஆட்சி கவிழ்ந்தது. பெரும்பான்மையை இழந்து விட்ட மாநில முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி மலாக்கா சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநருக்குப் பரிந்துரைக்க மாநில ஆளுநரும் அதற்கேற்ப சட்டமன்றத்தைக் கலைத்தார். தொடர்ந்து சுலைமான் முகமட் அலியையே காபந்து முதலமைச்சராக நியமித்தார்.

பெரும்பான்மையை இழந்து விட்ட சுலைமான் முகமட் அலி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, புதியதோர் அரசாங்கத்தை அமைக்க மாநில ஆளுநர் முகமட் அலிக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என சில சட்ட அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

அப்படி செய்யாமல் பெரும்பான்மையை இழந்துவிட்ட முதலமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தைக் கலைக்க முடியுமா? அப்படிச் செய்தால் சட்டப்படி அத்தகைய கலைப்பு செல்லுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

அதன் காரணமாகவே, மலாக்கா சட்டமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகக் கூறியிருக்கிறது நம்பிக்கைக் கூட்டணி.

நம்பிக்கைக் கூட்டணியின் வழக்கின் முடிவும் அது தொடர்பான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தெரிந்த பின்னரே மலாக்கா சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நவம்பர் 20-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுமா என்பது தெரிய வரும்.

-இரா.முத்தரசன்