கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடந்தேறிய மஇகாவின் கட்சித் தேர்தல்களில் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா டத்தோ எம்.அசோஜன், ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.
மஇகா தேசிய துணைத் தலைவரும், மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.
3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 6 பேர் போட்டியிட்டனர். நடப்பு உதவித் தலைவர்களாக கடந்த 2018 கட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா, டத்தோ சிவராஜ் ஆகிய மூவராவர். இவர்கள் நேற்று நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டனர்.
இவர்களைத் தவிர, நடப்பு தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன், கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.கே.இராமலிங்கம், சிப்பாங் தொகுதித் தலைவரும் மஇகா தகவல் பிரிவுத் தலைவருமான குணாளன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.
முதலாவது நிலையில் வெற்றி பெற்ற டி.மோகன்
போட்டியிட்ட அறுவரில் மிக அதிகமான வாக்குகள் பெற்று முதலாவது நிலையில் டி.மோகன் வெற்றி பெற்றார். இவருக்கு 11,586 வாக்குகள் கிடைத்தன.
இரண்டாவது நிலையில் மிக அதிகமான வாக்குகளுடன் டி.முருகையா வெற்றி பெற்றார். இவருக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 9,139 ஆகும்.
மூன்றாவது நிலையில் எம்.அசோஜன் வெற்றி பெற்றார். 8,703 வாக்குகளை அசோஜன் பெற்றார்.
நடப்பு உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அவருக்கு 4,589 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இரண்டாவது முறையாக உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஏ.கே.இராமலிங்கத்திற்கு 7,102 வாக்குகள் கிடைத்தன. சிவராஜை விட கூடுதலான வாக்குகளை இவர் பெற்றிருக்கிறார்.
மற்றொரு வேட்பாளரான வி.குணாளன் 3,223 வாக்குகள் பெற்றார்.