Home Photo News தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு சரவணன் 1 இலட்சம் ரிங்கிட் நன்கொடை

தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு சரவணன் 1 இலட்சம் ரிங்கிட் நன்கொடை

937
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை மே 3-ஆம் தேதி சிறப்புற நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு  ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

“மழையிலும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அளப்பரிய பணியை மேற்கொள்ளும் தமிழ் ஊடக பணியாளர்களின் சேவைகளைப் பாராட்டுகிறேன். உலகின் எந்த மூலையில் ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை சில நொடிகளில் அறிந்து கொள்ள கூடிய தகவல் தொழில்நுட்பம் இன்று வளர்ந்து விட்டது. அதீத வளர்ச்சியடைந்துள்ள சமூக ஊடகங்கள் (social media) நமது தொடர்பலையை விரிவுபடுத்தி இருக்கின்றன” என தனதுரையில் சரவணன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“ஒரு செய்தியைத், தகவலை, அரசாங்கத்தின் கொள்கையை மக்களிடம் தெளிவாகவும், சரியாகவும் கொண்டு சேர்க்கும் கடமை பத்திரிகையாளர்களைச் சாரும். மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அனைத்துப் பத்திரிகையாளர்களும் ஒற்றுமையாக இணைந்து அரங்கத்தில் கூடியிருந்தது போற்றத்தக்க செயல். பத்திரிகையாளர்கள் பெர்கேசோ வழி தங்கள் நலன் காக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிலையற்ற இந்த வாழ்வில், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்குமான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என சரவணன் தனதுரையில் தெரிவித்தார்.

“உயர் வருமானம் பெரும் நாடும் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் மலேசியா, 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் மதிப்பு 4.8 பில்லியன் ரிங்கிட் ஆகும். பத்திரிக்கையாளர்கள் SOCSO என்னும் தொழிலாளர் சமூக காப்புறுதி சந்தாவை செலுத்துவது அவசியம். இதை முதலாளிமார்கள் உறுதி செய்ய வேண்டும்” எனவும் சரவணன் வலியுறுத்தினார்.

“நமது சமுதாயம், தகவல் அறிந்த சமூகமாகவும் , சமூக அக்கறையுள்ளவர்களாகவும் உருமாற்றும் முக்கிய பங்கை ஊடகங்கள் வகிக்க வேண்டும். அவை வெறும் செய்திகளை மட்டும் தந்துவிடுவதில்லை, நமது சிந்தனையை செதுக்கி, சமூகத்தையும் உலகத்தையும் பார்ப்பதற்கான ஜன்னலையும் திறந்துவிடுகின்றன. அதோடு, லட்சக்கணக்கான மக்களை எளிதில் சென்றடையும் வகையில் சமூக ஊடகங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது” எனவும் சரவணன் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.

முன்களப் பணியாளர்களாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும் ஊடகத் துறையினருக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் தெரிவித்த சரவணன் அவர்களின் பணி சிறக்கட்டும் எனவும் வாழ்த்தினார்.

இந்தப் பத்திரிகையாளர் குடும்ப தின நிகழ்ச்சியில், உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தலில் இணையம் வழி கல்வி போதித்து வரும் குமாரி சுபாஷினி அமிர்தம் அவர்களுக்கு நாசா விண்வெளி மையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதைத்  தொடர்ந்து அவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மூத்த பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது. மறைந்துவிட்ட உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: