கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத் தொடுத்துள்ளது.
ஹாரிஸ் இப்ராகிம், நூர் அய்ன் முஸ்தாபா, ஸ்ரீகாந்த் பிள்ளை ஆகிய 3 வழக்கறிஞர்கள் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர். ஊழல் தடுப்பு ஆணையம், அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, அரசாங்கம் ஆகிய 3 தரப்புகளை பிரதிவாதிகளாக அந்த வழக்கறிஞர்கள் பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் தொடர்பில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம், நீதிபதிகளைக் கூட விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக அறிக்கை ஒன்றின் வழி அண்மையில் தெரிவித்திருந்தது.
தங்களின் வழக்கறிஞர்களான, மாலிக் இம்தியாஸ் சர்வார் நிறுவனத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் முகமட் நஸ்லானுக்கு எதிரான வழக்கு சட்டத்துக்கு புறம்பானது என வழக்கு தொடுத்திருக்கும் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
நீதித் துறை என்பது அரசாங்கத்துடன் சம்பந்தப்படாத – தனியாக இயங்கும் பிரிவு என்பதால் – நீதிபதி முகமட் நஸ்லான் மீதான விசாரணைகள் நடைமுறைச் சட்டங்களை மீறுவதாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.