Home Photo News சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

734
0
SHARE
Ad
செப்டம்பர் 27-ஆம் தேதி பெரிக்காத்தான் தலைவர் மொகிதின் யாசின் பாஸ் தலைவர் ஹாடி அவாங்கைச் சந்தித்தபோது…

(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்)

*தெங்கு சப்ருல் நுழைவால் மாற்றம் ஏற்படுமா?

*முவாபாக்காட்  நேஷனல் மூலம் அம்னோ – பாஸ் இணைப்பு சாத்தியமா?

#TamilSchoolmychoice

*சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆதரவு வாக்கு வங்கி அதிகரிப்பா?

2008ஆம் ஆண்டு முன்னால் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி ஒன்று வெற்றிவாகை சூடும் என யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.

ஒரு ரிங்கிட் கூட அதற்காக  பந்தயம் கட்ட யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால், 2008இல் பிகேஆர்– ஜசெக– பாஸ் இணைந்த பக்காத்தான் ராயாட் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியது.

தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அப்போது முதல் அடுத்து வந்த பொதுத் தேர்தல்களிலும்  பக்காத்தான் கூட்டணி பாஸ் கட்சி ஆதரவு இல்லாமலேயே சிலாங்கூர் மாநிலத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

2018 பொதுத் தேர்தலில் பாஸ் தனித்து நின்றதால் மலாய் வாக்குகள் பிளவு பட்டன.  போதாக் குறைக்கு துன் மகாதீர் தலைமைத்துவத்தால் கூடுதல் மலாய் வாக்குகள் பக்கத்தான் பக்கம் திரும்பின.

மீண்டும் சிலாங்கூர் பக்கத்தான் வசமானது.

ஷெரட்டான் நகர்வாழ் பாதிப்படையாத சிலாங்கூர்

மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று சிலாங்கூரை ஆட்சி செய்து  பக்கத்தான் கூட்டணி ஷெரட்டன் நகர்வினால் மத்திய அரசாங்கத்தை இழந்தாலும் – சில மாநிலங்களை இழந்தாலும் சிலாங்கூரை மட்டும் இழக்கவில்லை.

ஷெரட்டன் நகர்வில் கதாநாயகனாக திகழ்ந்த அஸ்மின் அலி சிலாங்கூர் நாடாளுமன்ற– சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவரால்  சிலாங்கூர் மாநிலத்தைக் கவிழ்க்க இயலவில்லை.

அதன் பிறகு, பாஸ்– அம்னோ இணைந்து முவாபாக்காட் நேஷனல் என்ற மலாய் முஸ்லிம் கூட்டணியை அறிவித்தன.

அதன் மூலம் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற முழக்கங்கள் கேட்கத் தொடங்கின.

பாஸ் – அம்னோ இணைந்து களம் கண்டால் கூடுதல் சட்டமன்றத் தொகுதிகளை அவை இரண்டுமே பக்காத்தானுக்கு எதிராக வெல்ல முடியும் என்பதை முதல் கட்ட ஆய்வுகள் தெரிவித்தன.

ஆனால், மீண்டும் ஓர் அரசியல் திருப்பம் நிகழ்ந்தது.

பாஸ்– முவாபாக்காட் நேஷனல் கூட்டணியை கைவிட்டு  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியோடு கைகோத்தது.

இன்னும் அந்த கூட்டணியில் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து  முவாபாக்காட் நேஷனல் சாத்தியமே என்று பேசி வருகிறது.

இதற்கிடையில், முவாபாக்காட் கூட்டணி குறித்து சாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தப் போவதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் கூறியிருந்தார். அந்த சந்திப்பும் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 27) நடந்தேறியது (காண்க: படம்)

எங்களின் முதல் எதிரி பக்காத்தான் கூட்டணிதான், தேசிய முன்னணி அல்ல என பாஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,  பெரிக்காத்தான் தலைவர் முஹிடின் யாசினோ எங்களின் முதல் எதிரி தேசிய முன்னணிதான் எனக் கூறுகிறார்.

ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும்  இரண்டு கட்சிகளுக்கும்  வேறு வேறு அரசியல் எதிரிகள் இருப்பது கூடுதல் குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தெங்கு சப்ரூல் நுழைவு

இந்த சூழ்நிலையில்தான் நிதி அமைச்சர் தெங்கு சப்ரூல் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கோடி காட்டியிருக்கிறார்.

தெங்கு சாப்ருல்

கடந்த சில மாதங்களாக அந்தத் தொகுதியில் தீவிர தேர்தல் பணி ஆற்றி வருகிறார். கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என்ற ஆருடங்களும் நிலவுகின்றன.

கோலசிலாங்கூர் தொகுதியின் கீழ் புக்கிட் மெலாவாத்தி, ஈஜோக், ஜெரம் ஆகிய 3 தொகுதிகள் வருகின்றன. இதில் ஈஜோக் தொகுதியில் 2018-இல் ம.இ.கா. சார்பில்  கே. பார்த்திபன் போட்டியிட்டார். மீண்டும் ஈஜோக் தொகுதி ம.இ.கா.வுக்கே ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே,  புக்கிட் மெலாவாத்தி, ஜெரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தெங்கு சப்ருல் போட்டியிடலாம். தெங்கு சப்ருலின் திடீர் நுழைவு சிலாங்கூர் அம்னோ– தேசிய முன்னணி  வட்டாரங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெங்கு சப்ருல், முஹிடின் யாசினால் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டவர். ஆரம்பத்தில் அவர், தான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைக் கூட பகிரங்கமாகக் கூறவில்லை. ஆனால்,  தற்போது அம்னோவின் தலைமையிலான  ஆட்சி நடைபெறும் வேளையில் தான் நீண்ட காலமாக அம்னோ உறுப்பினர் எனக் கூறியிருக்கிறார்.

கோலசிலாங்கூர்  தொகுதியில் அவர் அம்னோ சார்பில் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. சட்டமன்றத்திலும் அவர் வெற்றி பெற்றால்,  சிலாங்கூர் மந்திரி பெசாராக அவர் நியமிக்கப்படலாம் என்ற பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

சூல்கிப்ளி பின் அமாட்

கோலசிலாங்கூரின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கிப்ளி பின் அமாட் அமானா கட்சியைச் சேர்ந்தவர். அவர் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டாலும் தெங்கு சப்ருல் நுழைவு காரணமாக வலிமையான போட்டியை வழங்க அவர் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் பக்கத்தான் வட்டாரங்களில்  உலவுகின்றன.

எனவே, சிலாங்கூர் மந்திரி பெசாராக வேண்டும் என்றால் முதலில்  தெங்கு சப்ருல் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் வெற்றி பெற வேண்டும்.

கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் சூல்கிப்ளி அமாட் களமிறங்கினால் அது தெங்கு சப்ருலுக்கு பெரும் சவாலாக அமையும்.

மேற்கு மலேசியாவில்  தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை            

அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி மேற்கு மலேசியாவிலுள்ள 165 தொகுதிகளில் 67 தொகுதிகளில் தேசிய முன்னணிக்கு ஆதரவான அலை வீசுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்தில்  தேசிய முன்னணிக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக அந்த கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால்,  அந்த கருத்துக் கணிப்புகள் எடுத்த காலகட்டம் ஜூலை, ஆகஸ்டு 2022 மாதங்களாகும்.

ஆனால்,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தேசிய முன்னணிக்கு அதே அளவுக்கான ஆதரவு அலை வீசுகிறதா என்பது கேள்விக் குறிதான்.

போர்க்கப்பல் ஊழல் விவகாரத்தையும் அதனால் அம்னோவுக்கு ஏற்பட்டிருக்கும் சிதைவையும் நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2018 பொதுத் தேர்தலில்  மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 51 இத்தனை தொகுதிகளில் பக்கத்தான் வெற்றி பெற்றது. அதில் ஒரு சிலர் அதன் பின்னர் கட்சி மாறியிருக்கின்றனர். இருந்தாலும் பக்கத்தானின் பெரும்பான்மை குறையவில்லை.

2018 பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20  தொகுதிகளை பக்கத்தான் கைப்பற்றியது. சபாக் பெர்ணம், தஞ்சோங் காராங் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணி கைப்பற்றியது.

15-ஆவது பொதுத் தேர்தலில்  நடப்பு சூழ்நிலையில் மலாய் கட்சிகள் நான்கு அணிகளாக பிரிந்து களம் காணவிருக்கின்றன.

பாஸ்– அம்னோ இணைப்பு அநேகமாக சாத்தியமில்லை என்றே கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில்  சிலாங்கூர் மாநிலத்தை பாஸ் கட்சியின் உதவி இல்லாமல்  அம்னோ கைப்பற்றுவது கனவாகவே முடியும்.

மலாய் வாக்குகள் சிதறுவதால் கூடுதல் வாய்ப்பு யாருக்கு?

மலாய் வாக்குகள் பிளவுபடுவதால் வெற்றி வாய்ப்பு தேசிய முன்னணிக்கா பக்கத்தான் அணிக்கா என்பதும் போகப் போக ஒவ்வொரு தொகுதியாக ஆராயும்போதுதான் தெளிவாகப் புலப்படும். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும்  முப்பது விழுக்காட்டுக்கும் மேல் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை சிலாங்கூர் கொண்டிருக்கிறது.

மலாய்க்காரர் அல்லாத  பெரும்பான்மை வாக்குகள் பக்கத்தான் பக்கம் நோக்கியே திரும்பும் என நம்பலாம். எனவே, சிலாங்கூரில்  மீண்டும் பெரும்பான்மை சட்டமன்றத் தொகுதிகள் என்று ஆட்சி அமைக்கும் சாத்தியம் பக்கத்தானுக்கே சாதகமாக அமைந்திருக்கிறது எனலாம்.

– இரா.முத்தரசன்