Home நாடு 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் புதிய கூட்டணிகள்

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் புதிய கூட்டணிகள்

466
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய அரசியல் இதுவரை நாம் காணாத ஒரு புதிய சூழலுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக எல்லா கட்சிகளும் தாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை உறுதிபட தெரிவித்துவிட்டன.

பாஸ் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் நீடிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. தங்களுக்குத் துரோகம் செய்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியுடன் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் -தேர்தல் உடன்பாடு இல்லை என பக்காத்தான் தலைவர்கள் தங்களின் இறுதி முடிவாக தெரிவித்திருக்கின்றனர்.

மூடா கட்சியும் பி.எஸ்.எம். கட்சியும் பக்கத்தான் ஹாராப்பான் கூட்டணியோடு தேர்தல் உடன்பாடு கண்டிருக்கின்றன. எனினும் தொகுதிகள் ஒதுக்கீட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், துன் மகாதீர் அன்வாருடன் இணைந்து பணியாற்றத் தயார் – வாருங்கள் நம் பொது எதிரியை வீழ்த்த தேர்தல் உடன்பாடு காண்போம் – என அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், ஏற்கனவே பல முறை காயம்பட்ட அன்வாரோ இதுவரை பிடி கொடுக்கவில்லை. மகாதீர் துணையில்லாமல் பக்காத்தான் தேர்தல் களம் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்மூலம், 2018-இல் பக்காத்தான் மூலமே மகாதீரால் ஆட்சி அமைக்க முடிந்தது – மாறாக மகாதீரால் பக்காத்தான் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பதை நிரூபிக்க பக்காத்தான் தலைவர்கள் முயற்சி செய்வர்.

பெரிக்காத்தானுடனும் – பக்காத்தானுடனும் இன்னும் பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன எனவும் மகாதீர் அறிவித்திருக்கிறார்.

வேட்புமனுத் தாக்கலான நவம்பர் 5-ஆம் தேதிக்கு முன்பாக இறுதி நேரக் கூட்டணிகள் காணப்படலாம்.

பொன் வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி இந்த முறை தேசிய முன்னணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

இவ்வாறாக மேற்கு மலேசியாவின் முக்கிய கட்சிகளெல்லாம் தங்களின் கூட்டணிகளை வேட்புமனுத் தாக்கல் சமயத்தில் இறுதி செய்துவிடும். என்றாலும் பொதுத் தேர்தல் முடிவுகள் புதிய கூட்டணிகளை உருவாக்கும் சாத்தியத்தையும் நாம் மறுப்பதற்கில்லை.

இன்றைய நிலையில் 15ஆவது பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் அறுதிப்பெரும்பான்மையை தனித்துப் பெறும் சாத்தியம் இல்லை. எனவே, பொதுத் தேர்தல் முடிந்ததும் எல்லா கட்சிகளும் தாங்கள் பெறப் போகும் வெற்றி தோல்விகளுக்கேற்ப மனமாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் கொண்டிருக்கப் போகின்றன.

உதாரணமாக, பாஸ் கட்சி இருபது நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். தேசிய முன்னணி ஆட்சி அமைக்க பத்து அல்லது இருபது தொகுதிகள் கூடுதலாக தேவைப்பட்டால் கண்டிப்பாக பாஸ் மீண்டும் அம்னோவுடன் இணையும் என நம்பலாம்.

பெரிக்காத்தான் நேஷனல் அல்லது துன் மகாதீரின் பெஜுவாங் கட்சி சில இடங்களைக் கைப்பற்றினாலும் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அவர்களின் சில தொகுதிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறும்.

உதாரணத்திற்கு ஜோகூர், பாகோ தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக முஹிடின் யாசின் மீண்டும் வெற்றி பெறலாம். கெடாவின் லங்காவி தொகுதியில் மகாதீரே மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்புகளே அதிகம்.
மகாதீரின் மகனும் அவர் ஏற்கெனவே போட்டியிட்ட ஜெர்லுன் தொகுதியில் வெற்றி பெறலாம். இழுபறியான தேர்தல் முடிவுகள் அமைந்தால் இதுபோன்ற ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமர் யார் – அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்கப் போவது யார் – என்பதை நிர்ணயிப்பர்.

மகாதீர், முஹிடின் போன்றவர்கள் இணைந்து பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்கத்தானுக்கு ஆதரவு தர முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனவே, பொதுத் தேர்தல் முடிவுகள் சில புதிய கூட்டணிகளை – நம்ப முடியாத இணைப்புகளை – ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

யாரும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மீண்டும் ஆகக் கடைசியாக நடந்தது போன்றே – தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல், சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி இணைந்த மத்திய அரசாங்கம் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-இரா.முத்தரசன்