Home நாடு நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் 4 இந்தியர்கள்...

நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் : கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் 4 இந்தியர்கள் – இந்த முறை மூவர் மட்டுமே!

384
0
SHARE
Ad

சிரம்பான் :நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 11 இடங்களில் ஜசெக போட்டியிடுகிறது. அறிவிக்கப்பட்ட 11 வேட்பாளர்களில் மூவர் இந்தியர்களாவர்.

நீலாய் சட்டமன்றத் தொகுதியை ஜே.அருள்குமார் மீண்டும் தற்காக்கிறார்.நெகிரி செம்பிலானின் இரண்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவராகப் பதவி வகித்த அருள்குமார், பின்னர் அந்தப் பதவியிலிருந்து விலகி, போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளர் ஆனார்.

ரெப்பா சட்டமன்றத் தொகுதியில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த எஸ்.வீரப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பி.குணசேகரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக 4 இந்திய வேட்பாளர்களை நிறுத்தியது. மேற்குறிப்பிட்ட மூவரோடு ரஹாங் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற ஜோசபின் பிரித்தாம் சிங் இந்தியராவார். இம்முறை அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரஹாங் தொகுதியில் அவருக்குப் பதிலாக டெஸ்மண்ட் சியான் மியோவ் கோங் (Desmond Sian Meow Kong) நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜசெக கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சென்னா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

போட்டியிடும் 10 வேட்பாளர்களில் ரஹாங் வேட்பாளர் மட்டுமே புதுமுகம். மற்றவர்கள் மீண்டும் தங்களின் தொகுதிகளைத் தற்காக்க போட்டியிடுபவர்கள்.

தேசிய முன்னணி நெகிரி செம்பிலானின் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

6 தொகுதிகளில் போட்டியிடும் பிகேஆர் கட்சி

பிகேஆர் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண் சிக்காமாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். வெற்றி பெற்றால் அவரே மீண்டும் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமினுடின் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்கிறார்.

பிகேஆர் கட்சியின் 6 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே இந்தியராவார். போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட ரவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டாக்டர் ராஜசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அமானா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்டு வெற்றி பெற்ற லெங்கெங் தொகுதியை இம்முறை அமானாவுக்கு தேசிய முன்னணி விட்டுக் கொடுத்துள்ளது.