கோலாலம்பூர் : சில எதிர்மறை விவகாரங்களால் சில நன்மைகளும் விளையும் என்பது வாழ்க்கையின் விதிகளில் ஒன்று. அவ்வாறு, பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிராக, சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் சாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கு விவகாரத்தால் ஒரு நன்மையும் விளைய வழிபிறந்திருக்கிறது.
அந்த வழக்கில் முன்னாள் இராமசாமி 1,520,000-00 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தான் பணக்கார அரசியல்வாதி இல்லை என்றும் பொதுமக்கள் உதவியால்தான் அந்த இழப்பீட்டுத் தொகையை தன்னால் செலுத்த முடியும் என இராமசாமி அறிவித்திருந்தார்.
அவருக்காக தமிழர் குரல் இயக்கம் நிதி திரட்டி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணி வரையில் 691,874-84 ரிங்கிட் இராமசாமிக்காக திரட்டப்பட்டிருக்கிறது. மேலும் பல இயக்கங்கள் இராமசாமிக்கு ஆதரவாக மும்முரமாக நிதி திரட்டி வருகின்றன. ஹிண்ட்ராப் இயக்கமும் இராமசாமிக்கு ஆதரவாக ஒரு பேரணியை நடத்துகிறது.
பாலஸ்தீன மக்களுக்கு வழங்குவேன் – சாகிர் நாயக் அறிவிப்பு
இதற்கிடையில் தனது முகநூல் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த சாகிர் நாயக், இராமசாமி மூலம் கிடைக்கப்போகும் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களின் நலன்களுக்காக வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
எனவே, சாகிர் நாயக்- இராமசாமி விவகாரத்தால் இறுதியில் பலனடையப் போவது பாலஸ்தீன மக்கள் என்பதும் அனைவருக்கும் ஆறுதலான செய்திதான்.
இராமசாமிக்கு ஆதரவாகத் திரட்டப்படும் நிதிக்கு நிதி வழங்கி வருபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் – இந்துக்கள் ஆவர். இவர்கள் வழங்கும் நிதி – யாரோ ஒரு தனிநபருக்கு செல்லாமல் – பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேரப் போகிறது என்பதும் ஓர் ஆறுதலான செய்திதான்.