டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வந்த 7 வாரகால போர் ஒருவழியாக 4 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்கும் இடையிலான பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 25 பணயக் கைதிகள் விடுதலையாகியிருக்கின்றனர். இவர்களில் 13 இஸ்ரேலியர்கள், 10 தாய்லாந்து நாட்டினர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், அடங்குவர் என கத்தார் வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு கத்தார் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்தப் பணயக் கைதிகள் தற்போது இஸ்ரேலியக் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர் என்றும் அவர்கள் மீதான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போர்நிறுத்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 39 பாலஸ்தீன பெண்களும் சிறார்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
மொத்தம் 50 பணயக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தத்தின் விளைவாக எகிப்திலிருந்து எரிபொருள் வரத் தொடங்கியிருக்கிறது.
போர்நிறுத்தம் முடிவடைந்ததும் தொடர்ந்து தீவிரமாக போரைத் தொடரப் போவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது. அடுத்த 2 மாதங்களுக்கு போர் நீடிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அது தெரிவித்தது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போராட்டத்தால் இதுவரையில் பல குழந்தைகள் மரணமடைந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.