Home உலகம் இஸ்ரேல் தாக்கப் போவது அணு உலைகளையா? எண்ணெய் ஆலைகளையா? அக்டோபர் 7 பதற்றம்!

இஸ்ரேல் தாக்கப் போவது அணு உலைகளையா? எண்ணெய் ஆலைகளையா? அக்டோபர் 7 பதற்றம்!

325
0
SHARE
Ad
பெஞ்சமின் நெத்தன்யாகு

டெல்அவிவ் : இன்று அக்டோபர் 7-ஆம் தேதி ஒரு வரலாற்றுபூர்வ நாள். கடந்த ஆண்டு இதே நாளில்தான் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களில் பலரைக் கொன்று, சிறைப்பிடித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக இஸ்ரேல் பதிலடியாகத் தொடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து கொண்டே செல்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) ஈரானில் ஒரு மசூதியில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போது ரஷ்ய தயாரிப்பான துப்பாக்கியை கையில் ஏந்தியபடி  ஈரானிய மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஈரான் பின்வாங்காது என்று வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

இஸ்ரேல் மீதான ஈரானின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நியாயப்படுத்திய அவர் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என்றும் எச்சரித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் டெஹ்ரான், இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 200 ஏவுகணைகளைச் செலுத்தித் தாக்குதல் நடத்தியது.

ஈரானுக்குத் தக்க பதிலடி தருவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் இன்று அக்டோபர் 7 சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானை, பதிலடியாக இஸ்ரேல் தாக்குமா? அவ்வாறு தாக்கினால் அணு உலைகளைக் குறிவைக்குமா? அல்லது எண்ணெய் ஆலைகளைக் குறிவைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் ஈரானின் அணு உலைகளைத் தாக்குவதற்கு இதுவே தக்க தருணம் எனக் கூறியுள்ளனர்.

7 முனைகளில் இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்நோக்கியுள்ளது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டுமெனக் கூறியிருக்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரோனையும் நெதன்யாகு சாடினார்.

இன்றைய நாளில் அக்டோபர் 7 சம்பவத்தை நினைவுபடுத்தும் வண்ணம் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா என்ற பதற்றமும், பரபரப்பும் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.