மும்பை, மே 19- ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் சஞ்சய் தத், இரவில் தூக்கம் வராமல் பக்தி புத்தகங்களை படித்து வருகிறார்.
கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக 9 எம்.எம். பிஸ்டல் மற்றும் ஒரு ஏ.கே,56 துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் கடந்த 2006ல் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 21ம் தேதி உறுதி செய்தது. ஆனால் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக குறைத்து உத்தரவிட்டது.
அத்துடன் 4 வாரத்தில் தடா நீதிமன்றத்தில் சரணடையும்படியும் உத்தரவிட்டது. சில திரைப்படங்களை நடித்து கொடுக்க வேண்டியது இருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரி சஞ்சய் தத் மனு தாக்கல் செய்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று கருணை அடிப்படையில் கூடுதலாக 4 வாரம் கால அவகாசம் தரப்பட்டது. தண்டனையை ரத்து கோரிய அவருடைய மறுஆய்வு மனுவைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து கடந்த 16ம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த சிறையில் தீவிரவாதி கசாப் அடைக்கப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புமிக்க அண்டா செல் அறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டு இருக்கிறார். முதல் நாளன்று தூக்கமின்றி அவதிப்பட்ட சஞ்சய் தத் நேற்று முன்தினம் இரவிலும் சரியாக தூங்கவில்லை.
இதனால், தனது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பகவத் கீதை, ராமாயணம், ஹனுமன் சாலிஸா போன்ற பக்தி புத்தகங்களை படித்து ஆறுதல் தேடிக் கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, சஞ்சய் தத்தை ஆர்தர் ரோடு சிறையிலேயே வைத்திருப்பதா அல்லது எரவாடா சிறைக்கு மாற்றுவதா என்பது குறித்து நேற்று மாலை வரை அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.