சென்னை, ஜூன் 3- இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் – 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா.
சுப்பிரமணியன் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று காமராஜர் அரங்கில் முத்தமிழ் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை கருணாநிதி பார்வையாளர்களில் ஒருவராக இருந்து பார்த்தார். கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தியாவில் ஆளும்திறன் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான்.
ஒரு காலத்தில் வழிபாடு மற்றும் உணர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மொழி திராவிட இயக்கம் வந்த பிறகு போர்க்கருவியாக மாறியது. அடக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த கலைஞர் தனது எழுதுகோலால் மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.
சுவாசம் இருக்கும் வரை இதயம் துடிக்கும். பூமி சுற்றும் வரை ஈர்ப்பு இருக்கும். அதுவரை கருணாநிதி தடம் பதிப்பார் என்றார். இயல் தமிழ் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனும், இசை தமிழ் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனியும், நாடகத் தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் அருள்மொழியும் உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக பொருளாளர் முக ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.